அமைச்சர் பொன்முடியின் மகன் நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
கௌதம சிகாமணி
கடந்த 2006-11 காலகட்டத்தில் பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதமசிகாமணி எம்.பி. உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கை அடிப்படையாக கொண்டு அமைச்சர் பொன்முடி அவரது மகன் கௌதமசிகாமணி எம்.பி. ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. மேலும், பொன்முடி, கவுதமசிகாமணி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் கடந்த ஜூன் மாதம் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் முடிவில் முறைகேடாக பெற்ற பணத்தை சட்டவிரோத பண பரிவர்த்தனை மூலமாக வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், சோதனை முடிவில் முக்கிய ஆவணங்களும், 13 லட்ச ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்டுகள் உள்பட 81 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 40 கோடியே 90 லட்ச ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதமசிகாமணி எம்.பி. உள்பட 6 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக்கொண்ட விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக வரும் 24ம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதமசிகாமணி எம்.பி. உள்பட 6 பேருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu