சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கிய துல்லியமான மழை அளவீடு கருவி

சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கிய துல்லியமான மழை அளவீடு கருவி

சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி.

சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் துல்லியமான மழை அளவீடு கருவியை உருவாக்கி உள்ளனர்.

அடுத்த மூன்று மணி நேரத்தில் எவ்வளவு மழை பெய்யும் என்பதை துல்லியமாக கண்டுபிடித்து சொல்லும் அதிநவீன ரேடார் கருவியை சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கி வருவதாக அதன் இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழகம் இரண்டு மிகப்பெரிய வெள்ள பாதிப்பை எதிர்கொண்டது. இதனால் ஏராளமான பொருள் இழப்பும், சில உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், குறிப்பிட்ட நேரத்தில் எந்த அளவுக்கு மழை பொழியும் என்பது குறித்து முன்னறிவிப்பு விடுவிக்கப்படாததுதான் இந்த சேதத்திற்கு காரணம் என்று தமிழக அரசு குற்றம்சாட்டியது.

அதாவது, கடந்த 3 மற்றும் 4ம் தேதி மிக்ஜாம் புயல் சென்னையை கடந்து சென்றது. அப்போது மிகப்பெரிய அளவில் கனமழை பெய்தது. இதனால் கிட்டத்தட்ட 40 செ.மீ அளவுக்கு மழை பெய்தது. சென்னையின் வடிகால் அமைப்புகள் இந்த அளவு மழையை தாங்கும் அளவுக்கு அமைக்கப்படவில்லை. எனவே முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டிருந்தால் மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என ஆட்சியாளர்கள் கூறியிருந்தனர்.

அதேபோல, கடந்த டிசம்பர் 16, 17 நாட்களில் பெய்த வரலாறு காணாத பெருமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இங்கு ஒரே நாளில் 90 சதவிகிதம் அளவுக்கு மழை பெய்தது. இது ஓராண்டுக்கான மழை பொழிவாகும். எனவே இதனை எதிர்கொள்ள முடியாமல் 4 மாவட்டங்களும் திணறின. குறிப்பாக தூத்துக்குடி கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டது. இந்த பாதிப்புகளிலிருந்து இன்னும் இந்த மாவட்டம் முழுமையாக மீளவில்லை. இப்படி இருக்கையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் எவ்வளவு மழை பெய்யும் என்பதை துல்லியமாக கண்டுபிடித்து சொல்லும் அதிநவீன ரேடார் கருவியை சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கிவருவதாக அதன் இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது:-

புயல் எங்கு வருகிறது என்பதை நாம் தற்போது வெற்றிகரமாக கணித்து வருகிறோம். 72 மணி நேரத்திற்கு முன்பாகவே வானிலை ஆய்வு மையம் இதை கணித்துவிடுகிறது. இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் துல்லியமாக எவ்வளவு மழை பெய்யும் என்பதை கண்டறிய சில ரேடார் தொழில்நுட்பத்தை நாங்கள் பரிசோதித்து வருகிறோம். இதனை கொண்டு 10 ஆயிரம் சதுர மீட்டருக்குள் எவ்வளவு மழை பெய்யும் என்பதை கண்டுபிடிக்க முடியும். இது வெள்ள பாதிப்பை தடுக்க உதவி செய்யும் என்று கூறியுள்ளார்.

மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து பேசிய அவர், “இந்த தொழில்நுட்பம் பல துறைகளில் உதவி வருகிறது. குறிப்பாக மருத்துவ துறையில் இதன் பங்களிப்பு மிக அதிகம். குறிப்பிட்ட நோய்க்கு சிகிச்சை பெற அதிக அளவில் மக்கள் வரும் போது, நோய் தொடர்பான தகவல்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உள்ளீடு செய்தால், அடுத்து வரும் நோயாளியின் அறிகுறிகளை வைத்து, அவருக்கு எந்த மாதிரியான சிகிச்சை வழங்கலாம், அவர் நோயின் எந்த கட்டத்தில் இருக்கிறார் என்பதை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தெளிவாக விளக்கிவிடும். உலகம் முழுவதும் மருத்துவ துறையில் செயற்கை தொழில்நுட்பத்தின் பங்களிப்பை அதிகரிக்க சர்வதேச நாடுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன என்று கூறியுள்ளார்.

Tags

Next Story