இலங்கை கடற்படையினரால் 21 மீனவர்கள் கைது: மீட்க கோரி ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் 21 மீனவர்கள் கைது: மீட்க கோரி ஸ்டாலின் கடிதம்

முதல்வர் ஸ்டாலின்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 21 மீனவர்களையும் உடனடியாக மீட்க கோரி மத்திய மந்திரிக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.

இலங்கை கடற்படையினர் கைது செய்த ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் 21 பேரையும் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் மிக்ஜாம் புயல் ஆந்திராவின் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடந்ததால் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களில் 21 பேரை கைது செய்து இலங்கை காங்கேசன் துறைமுகம் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களது விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரம் மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புயல் காரணமாக வீட்டில் முடங்கி கிடந்த மீனவர்கள் புயல் கரையை கடந்த பின்னர் மீன்பிடிக்கச் சென்ற முதல் நாளே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இருப்பது அவர்களது வாழ்வாதாரத்திற்கு கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதனால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆதலால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்பதற்கு மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags

Next Story