வழக்கு தொடர்ந்த அன்சாரிக்கும் ராமர் கோவில் அழைப்பிதழ்: இது தான் இந்தியா

வழக்கு தொடர்ந்த அன்சாரிக்கும் ராமர் கோவில் அழைப்பிதழ்: இது தான் இந்தியா
அயோத்தி ராமர் கோவில் தொடர்பாக வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரிக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரிக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கப்பட்டு இருப்பது இந்திய இறையாண்மையை காட்டுவதாக உள்ளது.

அயோத்தி ராமர் கோவில் வரும் 22ம் தேதி கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட உள்ளது. இதற்காக அழைப்பிதழ் வழங்கப்பட்டு வரும் நிலையில், அயோத்தி வழக்கு விவகாரத்தில் முஸ்லிம் தரப்பு மனுதாரராக இருந்த இக்பால் அன்சாரிக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நீடித்த சட்ட போராட்டங்களுக்கு பிறகு கடந்த 2019ல் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட இடத்தில் அயோத்தி ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணியை மேற்கொள்ள ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது.

அதன்பிறகு பிரதமர் மோடி 2019ல் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். தற்போது அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அயோத்தி ராமர் கோவில் வரும் 22ம் தேதி கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும் ராமர் சிலையை எடுத்து வந்து வழங்க உள்ளார்.

இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு துறைகளில் சாதித்த பிரபலங்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். தற்போது ஒவ்வொருவருக்கும் கோவில் அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அயோத்தி விவகாரத்தில் முஸ்லிம் தரப்பு மனுதாரராக இருந்த இக்பால் அன்சாரிக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக உச்ச நீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியதையடுத்து ராமர் கோயில் பூமி பூஜை போடுவதற்கான முதல் அழைப்பிதழ் இக்பாலுக்குதான் வழங்கப்பட்டு இருந்தது. ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டது தொடர்பாக இக்பால் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், " ராமர் கோவிலில் ராமர் சிலை நிறுவப்பட உள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.இந்து - முஸ்லிம் - சிக்கியர் - கிறிஸ்தவ சமூகங்களின் நல்லிணக்கத்திற்கான இடம் அயோத்தி. இது அப்படியே தொடர வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் உள்ள முஸ்லீம்கள் மதிப்பு கொடுத்தனர். எங்குமே போராட்டம் நடைபெறவில்லை. அயோத்தி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். நானும் மகிழ்ச்சியில் உள்ளேன்" என்றார்.

Tags

Next Story