எம்.ஜி.ஆருக்கு நிகராக வந்த இறுதி அஞ்சலி கூட்டம்: நெப்போலியன் நெகிழ்ச்சி பதிவு

எம்.ஜி.ஆருக்கு நிகராக வந்த இறுதி அஞ்சலி கூட்டம்: நெப்போலியன் நெகிழ்ச்சி பதிவு

மக்கள் வெள்ளத்தில் நடைபெற்ற நடிகர் விஜயகாந்த் இறுதி ஊர்வலம்.

விஜயகாந்திற்கு எம்.ஜி.ஆருக்கு நிகராக இறுதி அஞ்சலி செலுத்த மக்கள் வந்துள்ளதாக நெப்போலியன் நெகிழ்ச்சி பதிவு செய்துள்ளார்.

தே.மு.தி.க. நிறுவன தலைவர் நடிகர் விஜயகாந்த் உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்து விட்டார். சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த அந்த கருப்பு நிலாவினால் அரசியலில் உயர்ந்த பதவி அதாவது முதல் அமைச்சராக கூட பதவி வகிக்க முடியவில்லை. அதற்கு காரணம் சூழ்ச்சிகள் நிறைந்த அரசியல் உலகில் அவரால் நடிக்க முடியாமல் போனது தான். ஒரு தலைவன் இறந்த பின்னர் அவனுக்காக மக்கள் செலுத்தும் அஞ்சலியே உண்மையான அஞ்சலி ஆகும். அந்த வகையில் நேற்றில் இருந்து இன்று வரை சென்னை மாநகரம் அவருக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள் வெள்ளத்தால் கண்ணீர் கடலில் மூழ்கி வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை முதல்வராக இருந்த போது மறைந்த அறிஞர் அண்ணாவிற்கு வந்த இறுதி அஞ்சலி கூட்டம் வரலாற்றில் இடம் பிடித்ததாக கூறப்படுவது உண்டு. அதே போல் எம்ஜிஆர் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்த மக்கள் கூட்டத்திற்கு இணையாக கேப்டன் விஜயகாந்த் இறுதிச் சடங்கில் கூட்டம் இருப்பதாக நெகிழ்ச்சியாக கூறியுள்ளார் நடிகர் நெப்போலியன்.

விஜயகாந்த்துடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ள நடிகர் நெப்போலியன் தற்போது அரசியலில் இருந்து விலகி அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகி உள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விஜயகாந்த் மறைவு, தமிழ்நாட்டுக்கு ஒரு மிகப்பெரிய இழப்பு. பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைவின்போது நான் சிறு பிள்ளை. அப்போது வந்த மக்கள் கூட்டம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். மிகப்பெரிய ஜனசமுத்திரத்தில் அறிஞர் அண்ணா உடல் மெரினா கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன் பின்னர் எம்ஜிஆர் அவர்களுடைய மறைவை பார்த்திருக்கிறேன். பின்னர் ஜெயலலிதா மறைவை பார்த்திருக்கிறேன். கலைஞருடைய மறைவை பார்த்து இருக்கிறேன். அதற்கு நிகரான ஒரு கூட்டம்தான் இன்றைக்கு விஜயகாந்த் அவர்களுக்கும் கூடி இருக்குது.

ஒட்டுமொத்த மக்களும் சென்னையில் குவிந்துள்ளார்கள். எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமாக இருக்குது. எங்கிருந்து பார்த்தாலும், எந்த தொலைக்காட்சியை திருப்பினாலும், மக்கள் வெள்ளமாக பார்க்க முடிகிறது. இந்த ஜன சமுத்திரத்தில் நானும் வந்து பங்கெடுத்துக் கொள்ள முடியவில்லை என்ற ஏக்கம் உள்ளது.

என்னுடைய குடும்ப சூழ்நிலை, என்னுடைய குழந்தைகளின் சூழ்நிலையினால் நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அரசியலை விட்டுட்டு, சினிமாவை விட்டுட்டு அமெரிக்காவில் உள்ளேன். நேற்று மகன் ஆசைப்பட்டதால் கப்பலில் பயணம் செய்ய அழைத்துப் போய்விட்டு காரை ஓட்டிக்கொண்டு சாலையில் வந்தபோதுதான் குஷ்பு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த தகவலை சொன்னார். அப்போது இரவு 10 மணி. என்னால் அதற்கு மேல் காரை ஓட்ட முடியவில்லை. அங்கேயே ஒரு ஹோட்டலில் குடும்பத்தோடு தங்கிவிட்டு பிறகுதான் கிளம்பினேன். அந்த அளவுக்கு விஜயகாந்த் மறைவு, அதிர்ச்சியளித்தது.

இவ்வாறு நெப்போலியன் பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story