தமிழகத்திற்கு கூடுதல் நிதியா? நிர்மலாவிற்கு பதிலடி கொடுத்தார் தங்கம்

தமிழகத்திற்கு கூடுதல் நிதியா? நிர்மலாவிற்கு பதிலடி கொடுத்தார் தங்கம்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.

தமிழகத்திற்கு கூடுதல் நிதி தரப்படவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு.

நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டுக்கு வரிவசூலைவிட அதிக நிதியை அளித்துள்ளோம் என்று கூறிய தகவல் தவறானது என்று விளக்கம் அளித்துள்ளார் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

சென்னையில் நடைபெற்ற தொழில் முனைவோர் மற்றும் வர்த்தகர்கள் சங்க விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுவரை வரிவசூலிலிருந்து 6 லட்சத்து 96 ஆயிரத்து 666 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாகப் கூறி இருந்தார்.

அதாவது, தமிழ்நாட்டிலிருந்து 2014-15 நிதியாண்டு முதல் 2023 மார்ச் வரை வரியாக 6 லட்சத்து 23 ஆயிரத்து 713 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளதாகவும், அந்த வரித் தொகையைவிட மத்திய அரசு இதுவரை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள தொகை 2 லட்சத்து 88 ஆயிரத்து 627 கோடி ரூபாயும் மானியமாக 2 லட்சத்து 58 ஆயிரத்து 338 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக ஒரு தகவலைப் பகிர்ந்திருந்தார். மேலும் நீண்ட கால மூலதன செலவுக்காக வேண்டி வட்டி இல்லாமல் 6412 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்தத் தொகை 50 ஆண்டுகளுக்குப் பின் திரும்ப அளிக்கத்தக்கது. அதற்கு அதுவரை வட்டி என்ன வருகிறது என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்றார்.

ஆக, மொத்தமாக 6 லட்சத்து 96 ஆயிரத்து 666 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஒரு கணக்கைச் சொல்லி இருந்தார் நிர்மலா சீதாராமன். அந்தக் கணக்கு தவறானது என்று ஆனந்த் சீனிவாசன் போன்ற பொருளாதார நிபுணர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சில விளக்கங்களை அளித்துள்ளார்.

"நேற்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டுக்கு அளித்துள்ள நிதி குறித்து ஒரு கணக்கைக் குறிப்பிட்டுப் பேசி இருந்தார். அதில் 2014 -15 நிதியாண்டு முதல் 2022-23 ஆண்டு வரை ஏறத்தாழ 4.75 லட்சம் கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த 4.75 லட்சம் கோடியில் 2.46 லட்சம் கோடி என்பது வரிப் பகிர்வாக வழங்கப்பட்டுள்ளது. அதைப்போன்று 2.28 லட்சம் கோடி ரூபாய் நமக்கு வழங்கவேண்டிய மானியம் மற்றும் உதவித்தொகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. நேரடி வரி வருவாயாக ஒன்றிய அரசு தமிழ்நாட்டிலிருந்து எவ்வளவு ரூபாயை வரியாக வசூல் செய்துள்ளது என்றால், 6.23 லட்சம் கோடி ரூபாயை வசூலித்துள்ளார்கள். இந்தத் தொகையானது நேரடி வரி வருவாய்க்கான தொகை. ஆனால் மறைமுக வரி வருவாய் எவ்வளவு தமிழ்நாட்டிலிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய எந்தத் தரவுகளையும் ஒன்றிய அரசு இதுவரை வழங்கவில்லை. நான் ஏற்கெனவே சட்டமன்றத்தில் இது குறித்த விளக்கங்களை அளித்துள்ளேன். அதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். நம்மிடம் இருந்து வசூலிக்கப்படும் ஒரு ரூபாய்க்கு ஒன்றிய அரசு 29 பைசாவைத்தான் திரும்ப வழங்குகிறது. இது தமிழ்நாட்டுக்கு மட்டுமான விதியாக பா.ஜ.க. கடைப்பிடித்து வருகிறது.

ஆனால், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் திரும்ப அளிக்கப்படும் வரி பகிர்வுத் தொகை என்பது மாறுபட்டதாக உள்ளது. உதாரணமாகச் சொன்னால், பாஜக ஆளும் மாநிலங்களில் 2014-15 முதல் 2022-23 நிதியாண்டுவரை 2,23 லட்சம் கோடிதான் வழங்க வேண்டும் என்றால், 15.35 லட்சம் கோடி ரூபாயை வழங்கி இருக்கிறது ஒன்றிய அரசு. அதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் உத்தரப் பிரதேசத்தைச் சொல்லலாம். 12வது நிதிக்குழு காலகட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்ட நிதி பகிர்வானது 5.305% ஆக இருந்தது. 15வது நிதிக்குழு காலகட்டத்தில் அதன் அளவானது 4.079% ஆகக் குறைந்துள்ளது.

இந்தத் தரவே தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியின் அளவு குறைக்கப்பட்டுள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது" என்று அடுக்கடுக்கான ஆதாரங்களைக் காட்டி நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள நிதி கணக்கு தவறானது என விளக்கம் அளித்துள்ளார்.

Tags

Next Story