குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் எப்போது? தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி

குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் எப்போது? தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி
X

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்.

குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் எப்போது? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி அளித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கோட்டை என கருதப்படும் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் உள்ள அரசுகளின் ஆயுள் காலம் முடிவுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த இரண்டு மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை வெளியான செய்தியின் படி மதியம் 3 மணிக்கு மேல் தலைமை தேர்தல் ஆணையர் தேர்தல் தேதி அறிவிப்பார் என கூறப்பட்டது. இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்று மதியம் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இமாச்சலப் பிரதேசத்திற்கு மட்டும் தேர்தல் தேதி அறிவித்துள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:-

இமாச்சலப் பிரதேச மாநில சட்டமன்ற சட்டமன்றத்திற்கு நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 17ஆம் தேதியான வருகிற திங்கட்கிழமை துவங்குகிறது. இந்த மாநிலத்தில் உள்ள மொத்த சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 68. மொத்த வாக்காளர்கள் 55 லட்சம் பேர் உள்ளனர். நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டாலும் டிசம்பர் எட்டாம் தேதி தான் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தனது அறிவிப்பின்போது கூறினார்.

மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் இன்று அறிவிக்கவில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் தெரியவில்லை. ஆனால் இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் நவம்பர் 12ஆம் தேதி முடிவடைந்தாலும் டிசம்பர் 8-ம் தேதி தான் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இதன் காரணமாக குஜராத் சட்டமன்றத் தேர்தல் உள்ளிட்ட வேறு சில மாநிலங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் வழக்கம்போல் நடைபெற உள்ள தேர்தலிலும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே தான் போட்டி நிலவி வந்தாலும் ஆம் ஆத்மி கட்சியும் அங்கு புதிதாக களத்தில் இறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story