மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிஸ்மிஸ்: ஜனாதிபதிக்கு அதிகாரி கடிதம்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிஸ்மிஸ்: ஜனாதிபதிக்கு அதிகாரி கடிதம்

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என ஜனாதிபதிக்கு தமிழக அதிகாரி ஒருவர் கடிதம் எழுதி உள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என சென்னையில் பணியாற்றி வரும் இந்திய வருவாய்த்துறையின் உயரதிகாரி ஒருவர் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு பரபரப்பான கடிதத்தை எழுதி உள்ளார். அதில் சேலத்தை சேர்ந்த 2 விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில் ஜாதி பெயர் குறிப்பிடப்பட்டு இருப்பதாக அதில் கூறி உள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அப்பம்மா சமுத்திரம் எனும் கிராமத்தை சேர்ந்தவர்கள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன். பட்டியலினத்தை சேர்ந்த இவர்கள் 6 ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ளனர். இந்நிலையில் தான் பா.ஜ.க. பிரமுகரான குணசேகரன் என்பவர் இருவரின் நிலத்தை அபகரிக்க முயன்றதாக புகார் எழுந்தது.

இதற்கிடையே தான் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி இருவருக்கும் அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. விவசாயிகளான இவர்கள் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இருவரும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். அப்போது தாங்கள் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடவில்லை. தங்களது வங்கி கணக்கில் ரூ.500 மட்டுமே உள்ளது. சென்னை வர கூட மற்றவர்களிடம் தான் பணம் வாங்கி வந்தோம். ரேஷனில் தான் அரிசி வாங்கி சாப்பிடுகிறோம். நாங்கள் எந்தவித சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடவில்லை என தெரிவித்தனர்.

இதற்கிடையே தான் அந்த விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் குறித்த விஷயம் தற்போது சர்ச்சையாகி உள்ளது. அதாவது சம்மனில் அவர்களின் சாதி பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கு புதிய தமிழகம் உள்பட பல கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. அதோடு சாதி பெயரை குறிப்பிட்ட அமலாக்கத்துறை மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இந்த விவகாரம் தற்போது பூதாகரமான நிலையில் சேலம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இதற்கிடையே தான் தற்போது சென்னையில் பணியாற்றி வரும் இந்திய வருவாய்த்துறை அதிகாரி பாலமுருகன் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு பரபரப்பான ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். பாலமுருகன் தற்போது சென்னையில் ஜிஎஸ்டி வரித்துறையில் துணை ஆணையராக பணியாற்றி வருகிறார்.

இவர் எழுதியுள்ள பரபரப்பான கடிதத்தில் சேலத்தை சேர்ந்த 2 விவசாயிகளுக்கு ஜாதி பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறையின் நடவடிக்கை என்பது கண்டிக்கத்தக்கது. சேலம் மாவட்ட பா.ஜ.க. பிரமுகரின் தொல்லையால் விவசாயிகள் கடந்த 4 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் உள்ளனர். இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்க வேண்டும். அவருக்கு மத்திய அமைச்சராக பொறுப்பேற்க தகுதியில்லை. இதனால் மத்திய நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து நிர்மலா சீதாராமனை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்'' என காட்டமாக வலியுறுத்தி உள்ளார்.

மத்திய நிதித்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் நிர்மலா சீதாராமனை அவரது துறையின் கீழ் பணியாற்றி வரும் அதிகாரி ஒருவர் அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என கோரி நாட்டின் முதல் குடிமகளாக உள்ள ஜனாதிபதி திரௌபதி முர்முவிற்கே கடிதம் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story