உத்தரகாண்ட் சுரங்கத் தொழிலாளர்களை மீட்க உதவிய ‘எலிவளை’ தொழில் நுட்பம்

உத்தரகாண்ட் சுரங்கத் தொழிலாளர்களை மீட்க உதவிய ‘எலிவளை’ தொழில் நுட்பம்

சுரங்கத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர் அவர்களை ஆரவாரத்துடன் அழைத்து செல்லும் காட்சி.

உத்தரகாண்ட் மாநில சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்க உதவிய ‘எலிவளை’ தொழில் நுட்பம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் ‘எலிவளை’ தொழில்நுட்பம் மூலம் மீட்கப்பட்டார்கள் என்ற ருசிகர தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர் காசி மாவட்டம் சில்க்யாரா பகுதியில் புண்ணிய ஸ்தலங்கள் செல்வதற்கான சாலை அமைப்பதற்காக மலைப்பாறைகளை குடைந்து சுரங்க பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் கடந்த 12ஆம் தேதி சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததால் இடிபாடுகளுக்கு இடையே சிக்கினார்கள். பாறைகள் இடிந்து விழுந்து மூடிக்கொண்டதால் தொழிலாளர்கள் 41 பேரும் வெளியே வராமல் சிக்கி கொண்டார்கள்.


தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்த நிலையில் மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட அரசு துறைகளைச் சேர்ந்தவர்கள் உடனடியாக மீட்பு பணியை தொடங்கி இரவு பகல் இடைவிடாது அதை தொடர்ந்தனர். அதே நேரம் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களுக்கு சிறிய குழாய் செலுத்தப்பட்டு அதன் மூலம் உள்ளே ஆக்ஸிஜன் மற்றும் உணவு, குடிநீர், மருந்துகள் வழங்கப்பட்டு வந்தன. இதனால் அவர்கள் உயிர் வாழ்வதற்கு பிரச்சினை இல்லாமல் இருந்து வந்தது.

அமெரிக்க தொழில்நுட்பம், சர்வதேச தொழில்நுட்பங்கள் மூலம் குழாய்கள் செலுத்தி ஆட்களை வெளியே கொண்டுவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் மீட்பு பணிகளில் தொடர்ந்து தடங்கல்களும் பிரச்சினைகளும் ஏற்பட்டது. துளையிடும் பிரம்மாண்ட எந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளும், துளையிடும்போது இடையூறாக எதிர்ப்பட்ட உலோக துண்டுகள், பெரும் பாறைகள் போன்றவையும் தொடர்ந்து மீட்பு பணியில் தொய்வை ஏற்படுத்தியது.


இந்நிலையில் உச்சகட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று 47 மீட்டர் தூரத்தில் துளையிடும் அமெரிக்க ஆகர் எந்திரத்தின் பிளேடுகள் உடைந்து சிக்கிக்கொண்டன .இதனால் துளையிடும் பணி முற்றிலுமாக நின்று போனது. ஹைதராபாத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட பிளாஸ்மா கட்டர் மூலம் ஆகர் எந்திர பிளேடுகள் வெட்டி அகற்றப்பட்டன. இப்படி இந்த மீட்பு பணியில் தொடர்ந்து பின்னடைவுகள் ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு 41 தொழிலாளர்களும் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் நல்ல உடல் நலத்துடனும், மனநலத்துடனும் இருந்தனர்.

உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர் வி. கே. சிங் ஆகியோர் அவர்களுக்கு ஆறுதல் கூறி மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினார்கள்.

அமெரிக்க ஆகர் எந்திரத்தால் முடியாத 41 தொழிலாளர்களும் , எலிவளை தொழில்நுட்பத்தின் மூலம் மீட்கப்பட்டது பற்றிய சுவாரசிய தகவல் கிடைத்துள்ளது.

பொதுவாக நிலக்கரி சுரங்கங்கள் போன்றவற்றில் சட்ட விரோதமாக சிறிய சுரங்கங்கள் அமைத்து அவற்றின் மூலம் நிலக்கரி திருடுவது சிலரின் வழக்கம். சில அடிகள் முதல் பல அடிகள் தூரம் வரை நீளும் இந்த குறுகிய ஆபத்தான சுரங்கங்களில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே நுழைய முடியும். இந்த சுரங்கங்கள் எலி வளை சுரங்கங்கள் என்றும் அவ்வாறு சுரங்கம் தோண்டுவோர் எலிவளை சுரங்க தொழிலாளர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இது சட்டத்தை மீறிய செயல் என்பதால் பிடிபட்டால் சிறை நிச்சயம் .அத்துடன் சமயங்களில் இந்த எலிவளை சுரங்கங்களில் தண்ணீர் புகுவது இடிந்து விழுவது போன்றவற்றால் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டு பலியாகும் பரிதாபமும் நடக்கும்.

ஆனால் இந்த எலிவளை சுரங்க தொழிலாளர்கள் தான் உத்தரகாண்ட் சுரங்கப்பாதை இறுதி கட்ட மீட்பு பணியை வெற்றிகரமாக நிறைவேற்றினர். இந்த பணியை மேற்கொள்ள இவர்கள் தான் சரியானவர்கள் என்று சுரங்கப்பாதை கட்டுமான பணியை மேற்கொண்ட நவயுவா என்ஜீனியரிங் நிறுவனம் முடிவு செய்தது. அதையடுத்து டெல்லி, ஜான்சி உள்ளிட்ட இடங்களிலிருந்து 12 எலிவளை சுரங்க தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டனர்.

அவர்கள் குழாய்களுக்கு சென்று 10 மீட்டர் இடிபாடுகளுக்குள் 24 மணி நேரத்திற்குள் துளை ஏற்படுத்தி விட்டனர். இது மீட்பு படையினர் எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைவான நேரமாகவும். அத்துடன் இந்த தொழிலாளர்கள் பயன்படுத்தியது மண்வெட்டி, சிறிய கருவிகள் போன்ற எளிய சாதனங்கள் தான். எலிவளை சுரங்கம் அமைப்பது சட்டவிரோதமாக இருக்கலாம். ஆனால் அந்த தொழிலாளர்களின் அனுபவமும் திறமையும்தான் கடைசியில் கை கொடுத்து இருக்கிறது என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினரான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சயத் ஹஸ்னைன் பாராட்டு தெரிவித்தார்.

சட்டவிரோத செயலை செய்பவர்களாக கருதப்படும் எலிவளை தொழிலாளர்கள் உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணியின் மூலம் ஒரே நாளில் ஹீரோக்கள் ஆகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story