தேர்தலை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு

தேர்தலை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு
தேர்தலை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பொதுமக்களுக்குப் புத்தாண்டு பரிசாக பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு மிகப் பெரியளவில் குறைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் எனப்படும் குரூட் ஆயில் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைந்த பாடு இல்லை. இது அரசியலாக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தீபாவளியையொட்டி ஒரு லிட்டருக்கு ரூ.10 வரை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்போது எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே பொதுமக்களுக்கு மத்திய அரசு புத்தாண்டு பரிசாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது வாகன ஓட்டிகள், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு உண்மையில் மிகப் பெரியளவில் பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதாவது பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிக விரைவில் ரூ.6 வரை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்ற போதிலும், மிக விரைவில் மத்திய அரசு இது குறித்து அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், இந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி, அதன் பலனை நுகர்வோருக்கு வழங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னையைப் பொறுத்தவரை இப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல தலைநகர் டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே லிட்டருக்கு ரூ.106.03 மற்றும் ரூ.92.76 ஆக உள்ளது. மும்பையில் பெட்ரோல் ரூ.111.35 ஆகவும், டீசல் ரூ.97.28 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து உலகம் இன்னும் மீளவில்லை. இதனால் சர்வதேச பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. சர்வதேச பொருளாதாரம் பலவீனமாக உள்ளதால் கச்சா எண்ணெய் தேவை குறைகிறது. மேலும், அமெரிக்காவும் அவசர தேவைக்குப் பயன்படுத்தத் தனது கையிருப்பை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாகவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைகிறது.

அதேபோல அதிக கச்சா எண்ணெய் நுகரும் நாடுகளில் ஒன்றான சீனாவிலும் இப்போது பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இது அங்கே கட்டுமானம் உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகளைக் குறைத்துள்ள நிலையில், அதுவும் கச்சா எண்ணெய் தேவையைக் குறைத்துள்ளது.

தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 76 டாலராக இருக்கிறது. சர்வதேச அரசியல் இதேபோல இருக்கும் பட்சத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 60 டாலர் வரை குறைய வாய்ப்பு இருக்கிறது. இதுவும் மத்திய அரசு விலையை குறைக்கத் திட்டமிட ஒரு முக்கிய காரணமாகும். மேலும், வரவிருக்கும் பொதுத் தேர்தலையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

எரிபொருள் விலையைக் குறைப்பது என்பது பொதுமக்களிடையே நல்ல இமேஜை பெற்றுத் தரும் என்பதும் இதற்கு மற்றொரு காரணமாகும். இதனால் மத்திய அரசு தனது கலால் வரியைக் குறைக்க உள்ளது. இதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6 முதல் 8 ரூபாய் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story