வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது: வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா

சென்னையில் மழை நீர் வீட்டுக்குள் புகுந்ததால் நடிகை நமீதா இரட்டை குழந்தைகளுடன் தவித்து வருகிறார்.
வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. முக்கிய சாலைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் சென்னை மாநகர மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மிக அதிகமாக தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் உள்ள வர்களை படகு மூலம் பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் மீட்டு வருகிறார்கள். அந்த வகையில் சென்னை ஆவடி பகுதியில் மட்டும் 3775 பேர் மீட்கப்பட்டதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறினார்.
அதே நேரத்தில் சென்னை பள்ளிக்கரணை, பெருங்குடி பகுதிகளில் 73 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்ததால் அந்த பகுதியில் பாதிப்பு மிக கடுமையாக இருந்தது. இதற்கிடையில் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி உடைந்ததால் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. பலரும் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள் .அந்த பகுதிக்கு மீட்பு குழுவினர் யாரும் வரவில்லை என்று அப்பகுதி மக்கள் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில் துரைப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் பிரபல நடிகை நமீதாவின் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தனது இரட்டை குழந்தைகளுடன் வீட்டில் தவித்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. நடிகை நமீதா பாரதீய ஜனதா கட்சியிலும் முக்கிய பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu