பாகிஸ்தானில் பயங்கரம்: மனித வெடிகுண்டு தாக்குதலில் 44 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் இன்று நடந்த அரசியல் கட்சி மாநாட்டில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 44 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-07-31 09:41 GMT

குண்டு வெடித்த இடத்தில் தீ பற்றி எரியும் காட்சி.

பாகிஸ்தானில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர்.

நமது அண்டை நாடான பாகிஸ்தானில் வன்முறை சம்பவங்கள் அடிக்கடி நடப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று அங்கு மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்து அதில் 44 பேர் உயிரிழந்த சம்பவம் உலக நாடுகளை கடும் அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் ஜே.யு.ஐ.எப்.என்னும் அரசியல் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டிருந்தனர். அப்போது, திடீரென குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் கலைந்து தலைதெறிக்க ஓடினர்.

இந்த குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஜே.யூ.ஐ.எப் கட்சியின் உள்ளூர் தலைவர் மவுலானா ஜியாஉல்லா உள்ளிட்ட 44 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால், உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. சம்பவம் நடந்த இடம் முழுவதும் மரண ஓலம் கேட்டது. காயம் பட்டு உயிருக்குபோராடிக்கொண்டிருந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதனிடையே, பாதுகாப்புப் படையினர் நடத்திய விசாரணையில் இது மனித வெடிகுண்டு தாக்குதல் என்பதும், 12 கிலோ வெடிபொருள் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. எனினும், தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். எனினும், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் அதிபர், பிரதமர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News