விருதுநகரில் பயிர் காப்பீடு தொகையை வழங்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

விருதுநகரில் மக்காச்சோள பயிர் காப்பீடு தொகையை வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்.

Update: 2022-02-24 14:10 GMT

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

விருதுநகரில் மக்காச்சோள பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

விருதுநகர் தாலுகா பகுதியில் வீரச்செல்லையாபுரம், வெள்ளூர், குமாரலிங்காபுரம், அழகாபுரி,மீசலூர் தாதம்பட்டி ஆகிய கிராமங்களில் 150 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். இப்பகுதியில் மக்காச்சோளம் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இங்கு பயிரிட்டிருந்த சுமார் 750 ஏக்கர் பரப்பளவிலான மக்காச்சோள பயிர்கள் படைப்புழு தாக்குதலால் சேதமாகின. 2020-2021க்கான இழப்பீட்டு தொகையை பயிர் காப்பீட்டுத் தொகையிலிருந்து வழங்க கோரி விவசாயிகள் பல்வேறு முறை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் தற்போது வரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தமிழ் விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அவர்களுடன் போலீசார் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் பயிர் காப்பீடுத்தொகை வழங்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்ததின் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். வருகிற மார்ச் மாதம் 10 ம் தேதிக்குள் பயர் காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அறையில் அமர்ந்து போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News