வெள்ள பாதிப்பை பார்க்க நேரில் வாங்க: பிரதமர் மோடிக்கு திருமாவளவன் கடிதம்

வெள்ள பாதிப்பை பார்வையிட நேரில் வருமாறு பிரதமர் மோடிக்கு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் கடிதம் எழுதி உள்ளார்.

Update: 2023-12-20 11:41 GMT

பிரதமர் மோடி, தொல். திருமாவளவன்.

தமிழகத்திற்கு இந்த டிசம்பர் மாதம் பொல்லாத மாதமாக மாறிவிட்டது என்றே சொல்லவேண்டும். ஆம். வங்க கடலில் சென்னை அருகே உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல் பட்டு மாவட்டங்கள் வெள்ளக்காடானது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.வெள்ளத்தில் சிக்கிய மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் படகு மூலம் மீட்டனர். மேலும் அவர்களுக்கு உணவு பொருட்களும் ஹெலிகாப்டர் மூலம் வழங்கப்பட்டது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தண்ணீர் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிகொண்டிருந்த நேரத்தில் அடுத்த அதிர்ச்சி செய்தியாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 தென் மாவட்டங்களில் பேய்மழை கொட்டி தீர்த்தது. சுமார் நூறு ஆண்டுகள் இல்லாத மழை பெய்ததால் நான்கு மாவட்டங்களில் சாலைபோக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளது. பேரிடர் மீட்பு குழு மற்றும் ராணுவத்தினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இப்படி அடுத்தடுத்த பெய்த இந்த பெருமழையால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதால் இந்த பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தபோது ரூ.௧௨ ஆயிரம் கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகளை பிரதமர் மோடி நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவர் தொல். திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் வரமுடியாவிட்டால் அமித்ஷா வர வேண்டும் எனக் கேட்டுகொண்டுள்ளார்.

அதுமட்டுமல்ல சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்கள், தூத்துக்குடி, திருநெல்வேலி, மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பின் தீவிரத்தை கருத்தில் கொண்டு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு திருமாவளவன் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

'சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களை தொடர்ந்து அண்மையில் பெய்த மழை வெள்ளத்தில் தென் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மழைப்பொழிவை எதிர்கொண்டன. எனவே, இந்த மாவட்டங்களில் எல்லாம் அவசர பேரிடர் நிவாரணம் தேவைப்படுகிறது. மத்திய அரசின் உடனடி தலையீடும் மீட்புப் பணிகளுக்காக ஆயுதப் படைகள் மற்றும் என்.டி.ஆர்.எப். பணியாளர்களை அனுப்புவதும் உடனடி தேவையாக இருக்கிறது.

இதற்கிடையே மீட்புப் பணிகளுக்கு ஏதுவாக இடைக்கால நிவாரண நிதியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும். கள நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். மேலும், பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று சேத மதிப்பீடுகளை செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன். உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து விரிவான நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் உடனடியாக கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.

இவ்வாறு திருமாவளவன் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News