திருவண்ணாமலையில் இந்து அமைப்பினர் போராட்டம்

திருவண்ணாமலையில் அம்மணி அம்மன் மடம் இடிப்பை கண்டித்து, இந்து அமைப்பினர் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-20 02:39 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் வடக்கு கோபுர அருகில் உள்ள அம்மணி அம்மன் மடத்தை பா.ஜ.க.வை சேர்ந்த சங்கர் என்பவர் ஆக்கிரமித்து மடத்தின் இடத்தில் மாடி வீடும், கார் ஷெட் அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அந்த மடத்தை அவரிடம் இருந்து மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க திருவண்ணாமலை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், உதவி ஆணையருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடு மற்றும் கார் ஷெட் அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது கோவில் நிர்வாக அறிவுறுத்தலின் பேரில் அம்மணி அம்மன் மடமும் இடிக்கும் பணி நடந்தது. மடத்தின் முகப்பு பகுதி பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டத்தை அறிந்த இந்து அமைப்பினர் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மடம் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் மடத்தை இடிக்கும் பணி நடைபெற்றது. தகவலறிந்த இந்து அமைப்பினர் அங்கு வந்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் திருவண்ணாமலை டிஎஸ்பி குணசேகரன் மற்றும் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மடம் இடிக்கும் பணி மீண்டும் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து இந்து அமைப்பினர் அம்மணி அம்மன் கோபுர வீதியில் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ், கோட்ட அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட பொது செயலாளர் அருண்குமார் மற்றும் இந்து அமைப்பினர் கலந்துகொண்டனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக வந்து மடம் இடிக்கப்பட்ட இடத்தின் அருகில் கற்பூரம் ஏற்றி ஒப்பாரி வைத்து போராட்டம் செய்தனர்.

இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ் கூறியதாவது,

உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலுக்கு வடக்கு கோபுரம் அமைத்துக் கொடுத்த பெண் துறவி அம்மணி அம்மாள். இம்மண்ணில் எண்ணற்ற சித்தர்கள், ஞானிகள், துறவிகள் வாழ்ந்திருக்கின்றனர். அதில் ஒருவர் தான் பெண் துறவி அம்மணி அம்மாள்.

அம்மணி அம்மாள் மடத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது சந்தோஷப்பட்டது இந்து முன்னணி. ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு நாங்கள் உறுதுணையாக இருந்தோம், ஆக்கிரமிப்பை எடுத்ததற்காக இந்து சமய அறநிலையத்துறையையும் காவல்துறையையும் நாங்கள் பாராட்டுகிறோம்.

ஆனால் ஆக்கிரமிப்பை அகற்றுகிறோம் என்ற பெயரில் அம்மணி அம்மாள் மடத்தை இடித்து தள்ளியுள்ளனர். ஆக்கிரமிப்புகளை எடுக்க சொல்லி தான் நீதிமன்றம் கூறியுள்ளது, மடத்தை இடிக்க சொல்லி ஆணை வழங்கவில்லை. தெய்வமாக வணங்கக்கூடிய ஒரு பெண் துறவி கட்டிய மடத்தை இடிப்பது நியாயமில்லை. மண்டபம் இடிந்து விழும் தருவாயில் இருப்பதால் இடிக்கப்பட்டது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள், இதற்கு உத்தரவு கொடுத்தது யார் என்று கூற வேண்டும்.

இடிப்பதற்கு முன்பு ஒன்பது துறைகளிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும் என்பது விதி. அவ்வாறு சான்றிதழ் பெறப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த மடத்தை பழமை மாறாமல் கட்டமைக்க வேண்டும் ,இது பசி தீர்த்த மடம் ,நோய் தீர்க்க மடம் ,எவ்வளவு அற்புதங்கள் நிகழ்ந்த இடம் தெய்வத்தாய் உருவாக்கிய மடம் . எனவே இங்கு இருக்கிற இந்துக்கள் மடம் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்ப கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் அம்மணி அம்மன் மடத்தை ஆக்கிரமித்ததாக கூறப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி சங்கர் அவரது ஆதரவாளர்களுடன் பாதி இடிக்கப்பட்ட அந்த மடத்தின் மீது ஏறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது,

அம்மணி அம்மன் மடம் என்பது கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது அல்ல. இது அறக்கட்டளை தான். இந்த அறக்கட்டளைக்கு தேவையான உதவிகளை கோவில் நிர்வாகம் செய்ய தான் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. நான் மடத்தின் இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக கூறி இடித்தனர். அதை நான் நீதிமன்றம் மூலம் எதிர் கொண்டு அதற்கான நஷ்டஈடு பெறுவேன்.

பழைய, புராதன கட்டிடங்களை இடிப்பதற்கு முன்பு பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. ஆனால் அதனை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் எந்த வழிமுறைகளையும் பின்பற்றாமல் அம்மணி அம்மன் மடத்தை இடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் இந்த பணி நடைபெற்று உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News