குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கடும் வாக்குவாதம்: ஆட்சியர் வெளிநடப்பு

திருவண்ணாமலையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-21 01:16 GMT

ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் முருகேஷ் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி,  வேளாண்மை இணை இயக்குனர் முருகன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குனர் சோமசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தேசிய விவசாயிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் மேய்க்கால் புறம்போக்கு, தேசிய நெடுஞ்சாலை, ஏரி, நீர்நிலை ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாகுபாடு பார்க்காமல் அகற்றவேண்டும். மாவட்டத்திலுள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் கரும்பு பயிருக்கு பயிர் கடன் வழங்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மேலும் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை அதிக விவசாயிகள் பயன் பெறச் செய்ய வேண்டும்.  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடியை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அப்போது சில விவசாயி சங்க பிரதிநிதிகள் பஞ்சம நிலம்  (டி சி லேண்ட்) தொடர்பாக பேசினர். அப்போது மாவட்ட ஆட்சியர் இந்த கூட்டத்தில் விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை பேசுங்கள் அப்போதுதான் நூறு கோரிக்கைகளில் பத்து கோரிக்கைகளுக்காவது. முழுமையாக தீர்வு காண முடியும். தனிநபர் பிரச்சினைகளை கோரிக்கை மனுவை என்னிடம் அளியுங்கள் பஞ்சமி நிலம் தொடர்பாக இங்கு பேச வேண்டாம் என்றார். இதையடுத்து விவசாயிகள் சிலர் டிசி லேண்ட் குறித்து  இங்கு பேசக்கூடாது என்று ஆட்சியர் எப்படிக் கூறலாம் என்று ஆவேசமாக பேசினர்.  அவர்களை ஆட்சியர் சமாதானம் செய்து அமர வைக்க முயற்சி செய்தார்.

இதனால் மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  பின்னர் கோபமடைந்த ஆட்சியர் முருகேஷ் அவர்கள்,  கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாகவும் கூட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் நடத்துவார் என்று தெரிவித்து விட்டு வெளியே சென்று விட்டார். இதையடுத்து விவசாயிகள் ஆட்சியரை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் விவசாயிகளை சமாதானம் செய்தனர். விவசாயிகள் அமைதியடைந்த பிறகு கூட்டத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேசினார். டிசி லேண்ட்   தொடர்பாக தனியாக சிறப்பு கூட்டம் நடத்தப்படும் என்று கூறினார். பின்னர் தொடர்ந்து நடந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.  பிறகு கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News