திருவண்ணாமலை தீபம்: தளர்வுகளும் தடைகளும்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், வரும் 7ம் தேதி முதல் தரிசனம் செய்ய இ-பாஸ்: கோயில் நிர்வாக அறிவிப்பு

Update: 2021-11-05 02:01 GMT

அண்ணாமலையார் திருக்கோவில்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, இந்த ஆண்டு வரும் 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் திருக்கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறும்.

அதைத்தொடர்ந்து, 10 நாட்கள் தீபத்திருவிழா உற்சவம் நடைபெறும். விழாவின் நிறைவாக வரும் 19ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர், அன்று மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபம் ஏற்றப்படும்.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடு காரணமாக, அதிகமான மக்கள் கூடும் திருவிழாக்கள் நடத்த அரசு கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அதன்படி, திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை கலெக்டர் அறிவித்திருக்கிறார்.

அதன்படி, தீபத்திருவிழா கொடியேற்றம், பரணி தீபம், மகா தீபம் ஆகியவற்றின்போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மேலும், மாட வீதியில் நடைபெறும் வெள்ளித் தேரோட்டம், மகா தேரோட்டம் மற்றும் விழா நாட்களில் தினசரி காலை மற்றும் இரவு நேரங்களில் நடைபெறும் சுவாமி வீதியுலாவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், வழக்கமான ஆன்மிக நடைமுறைப்படி தீபத்திருவிழா வழிபாடுகள் நடைபெற உள்ளது.

இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் வரும் 7ம் தேதி முதல் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனத்துக்கு அனுமதியுண்டு. மேலும், இ-பாஸ் தரிசன அனுமதி 7ம் தேதி முதல் 17ம் தேதி வரையும், 21ம் தேதி முதல் 23ம் தேதி வரையும் நடைமுறையில் இருக்கும். தீபத்திருவிழாவின் முக்கிய தினங்களான 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதியில்லை.

அதையொட்டி, ஆன்லைனில் முன்பதிவு செய்து இ-பாஸ் பெறுவதற்கான இணையதளம் இன்று  முதல் செயல்பட தொடங்கும். எனவே, 'www.arunachaleswarartemple.tnhrce.in' மற்றும் 'www.tnhrce.gov.in' இணையதளங்களில் தரிசனம் செய்ய விரும்பும் நாள், நேரம் ஆகியவற்றை தேர்வு செய்து இ-பாஸ் பெறலாம்.

அதில் ஆதார் எண், முகவரி, செல்போன் எண், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான ஆவண விவரம் போன்றவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு 30 சதவீதமும், வெளி மாவட்டத்தினருக்கு 70 சதவீதமும் அனுமதி அளிக்கப்படும் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்

Tags:    

Similar News