கிரிவலப் பாதையில் உள்ள கடைகளில் ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள கடைகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்

Update: 2024-04-23 00:59 GMT

கிரிவலப் பாதையில் உள்ள கடைகளில் உணவுப் பொருட்களை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் 

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் பாதையில் உள்ள கடைகளில் பக்தர்களுக்கு காலாவதியான பொருட்கள் விற்கப்படுகிறதா என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம் இன்று நடைபெறுகிறது. அதை ஒட்டி, ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். எனவே, சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடுகளை கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் நேற்று இரவு மீண்டும் ஆய்வு செய்தார். அதன்படி, கிரிவலப் பாதையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்களை எச்சரித்தார்.

கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக நடைபாதையில் கடைகளில் முன்பு வைத்திருந்த சேர்களை அகற்ற உத்தரவிட்டார்.

மேலும், கிரிவல பாதையில் உள்ள டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் டீத்தூள் தரமானதா, உணவுப் பொருட்கள் தரமானதா என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் சோதனை நடத்தப்பட்டது. டீ கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர்களை பயன்படுத்தக் கூடாது என கலெக்டர் எச்சரித்தார். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றார்.

அதை தொடர்ந்து, கிரிவல பாதையில் உள்ள ஒரு கடையில் குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அந்த குடிநீர் பாட்டில் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். மேலும், சம்பந்தப்பட்ட கடைக்கு ரூ. 5000 அபராதம் விதித்து, அதனை வசூலிக்குமாறு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கிரிவலப் பாதையில் உள்ள நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தார். மேலும் தற்காலிக கழிவறைகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர் 14 கிலோமீட்டர் முழுவதும் குடி தண்ணீர் வசதிகள் உள்ளதா என்பதையும் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.

தொடர்ந்து காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளிட்டவையும் சரியாக அமைக்கப்பட்டுள்ளதா ,கண்காணிப்பு கேமராக்கள் சரியாக இயங்குகிறதா என்பதையும் ஆய்வு செய்து அனைத்து முறையான பாதுகாப்பு அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தித் தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை காஞ்சி சாலை கிரிவலப் பாதையில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், வருவாய் கோட்டாட்சியர் , நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்

Tags:    

Similar News