ஆட்சியரை சந்திக்க காவல்துறையினர் விடாததால் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்!
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு அளிக்க வந்த பொதுமக்களை காவல்துறையினர் உள்ளே விடாததால் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஆர்கே பேட்டை அடுத்து கொண்டாபுரம் காலனியில் வசித்து வரும் ஆதிதிராவிட மக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது.
இதில் திருவள்ளூர் மாவட்டம், ஆர் கே பேட்டை அம்மனேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள கொண்டாபுரம் காலனியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.அப்போது அங்கிருந்த காவல்துறை அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக உள்ளே அனுமதிக்காததால், மாவட்ட ஆட்சியரகம் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்,
பின்னர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர் ஐந்து நபர்களை மட்டும் மனு அளிக்க, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அழைத்துச் சென்றனர். அந்த மனுவில் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து அப்பகுதியில் வருகிறோம். நாங்கள் ஒரே வீட்டில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்களாக வசித்து வருகிறோம்.
கடும் இட நெருக்கடியில் வாழ்ந்து வருகிறோம். ஆகையால் எங்களுக்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், என மனு அளித்துள்ளனர். இது குறித்து உரிய ஆய்வு செய்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததாக தெரிவித்தனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.