ஊத்துக்கோட்டை அருகே காணாமல் போன கல்லூரி மாணவன் கொலை:2 நண்பர்கள் கைது
திருவள்ளூர் அருகே காணாமல் போன கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் இருவரை கைது செய்தனர்.;
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை ரெட்டிதெருவில் வசித்து வருபவர் தனசேகர் வீடு கட்டும் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மகன் தினேஷ் (வயது 19) உண்டு. இவர் சென்னை வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.இந்நிலையில் இவர் தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கி தருமாறு தொந்தரவு செய்துள்ளார்.
அதற்கு அவர்கள் மறுத்துள்ளனர். இதனால் தினேஷ் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ம்தேதி அன்று வெளியேறி சென்று விட்டார். ஆனால் தினேஷ் வீட்டை விட்டு சென்றவன் மீண்டும் வீடுதிரும்பவில்லையே என அவனது பெற்றோர்கள், உறவினர்களின் வீடுகளில், மற்றும் நண்பர்களிடம் விசாரித்தனர்,அவனது உறவினர்கள் வரவில்லை என கூறி விட்டனர்.
இதனால் தினேஷ் காணவில்லை எனவும் அவனை கண்டுபிடித்து தர வேண்டும் எனவும் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 24 தேதி அன்று புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்டு வழக்கு பதிவு செய்த ஊத்துக்கோட்டை காவல்துறையினர் மாணவன் தினேசை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை,
கடந்த 5 நாட்களுக்கு முன்பு தினேசை கொலை செய்து இருப்பதாக ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது, இந்தத் தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி தலைமையில் இன்ஸ்பெக்டர் தேவராஜ், எஸ்ஐ பிரசன்ன வரதன் மற்றும் தனிபடை எஸ்ஐக்கள் ராவ் பகதூர், செல்வராஜ் மற்றும் போலீசார் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இதில் தினேஷின் நண்பர்களான ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையை சேர்ந்த நாகா என்ற நாகேஷ் ( வயது 22 ) , ஊத்துக்கோட்டையை சேர்ந்த ரவி என்பவரின் மகன் கார்த்திக் ( வயது 22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் சந்தேகத்தின் பேரில் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
இதில் அவர்கள் தினேசை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டு போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் சென்னேரி கால்வாய் கரை முட்புதரில் மது அருந்தி கொண்டிருந்தோம் அப்போது காமேஷ் மற்றும் தினேஷுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் எதிர்பாராத விதமாக காமேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தினேசின் கழுத்தில் வெட்டினான். இதில் தினேஷ் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்ததாகவும், பின்னர் 4 பேரும் ஒரு அடி ஆழத்திற்கு குழி தோண்டி தினேஷின் உடலை புதைத்து விட்டு , அங்கிருந்து சென்று விட்டோம் என கூறி உள்ளனர்.
இதையறிந்த போலீசார் ஆந்திர மாநிலம் சத்தியவேடு தாசில்தார் சுப்பிரமணி தலைமையில் திருவள்ளூர் அரசு மருத்துவ மனையின் மருத்துவ குழுவினர் நேற்று , கொலை செய்து புதைக்கப்பட்டு அழுகிய நிலையில் இருந்த தினேஷின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து , முக்கிய உடல் பாகங்களை சேகரித்து சென்றனர்,பின்னர் தினேஷின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர் .
இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட நாகா என்ற நாகேஷ், கார்த்திக் ஆகிய 2 பேரை ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி 2 பேரையும் புழல் சிறையில் அடைக்க உத்திரவிட்டார்.
மேலும் 17 வயது சிறுவனை திருவள்ளூர் இளஞ்சிறார் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர் .முக்கிய குற்றவாளியான காமேஷ் என்பவன் சிறையில் இருப்பதால் அவனை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்தால் மட்டுமே தினேசை கொலை செய்ததற்கான காரணம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
நண்பனை அழைத்துச்சென்று மது போதையில் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் ஊத்துக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.