நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்

ஆவடி அருகே சிப்காட் நில வங்கிக்காக நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

Update: 2024-10-29 02:45 GMT

கிராம மக்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட போது.

ஆவடி அருகே சிப்காட் நிலவங்கிக்காக நிலங்களை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பாக அமர்ந்து போராட்டம் மேற்கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டத்திற்கு உட்பட்ட வெள்ளானூர், பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட கும்மனூர் கிராமங்களில் உள்ளடக்கிய பகுதியில் சிப்காட் நிலவங்கிக்காக மக்கள் வாழும் வீடுகள் மற்றும் பட்டா நிலங்கள் அரசுக்கு சொந்தமான நிலங்கள் என 626 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிய வருகிறது.

தமிழக அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நிதிநிலை அறிக்கையில், சிப்காட் தொழிற்பூங்காக்களை உருவாக்குவதற்காக 45,000 ஏக்கர் நிலங்களைக் கொண்ட நிலவங்கி அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், சென்னை வண்டலூரில் தொடங்கி மீஞ்சூர் வரையிலான சென்னை வெளிவட்டச் சாலையை ஒட்டி அமைந்திருக்கும் ஆவடி வட்டம் வெள்ளானூர் கிராமத்தில் 488 ஏக்கர் நிலங்களும் பொன்னேரி வட்டம் கும்மனூர் கிராமத்தில் 134 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 253.44 ஹெக்டேர், அதாவது 626 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த சிப்காட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதற்கான நிர்வாக ஒப்புதலை தமிழக அரசிடமிருந்து பெற்றுத் தரக்கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கடிதம் எழுதி அனுப்பி உள்ளார். அத்தகைய கடிதம் விவரம் அறிந்த அப்பகுதி மக்கள் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், 10,000 குடும்பங்களில் வாழும் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவது மட்டுமின்றி வாழ்விடங்களை இழந்து உள்நாட்டு அகதிகளாக மாறும் ஆபத்து நேரிடும் என்றும்

கடன் வாங்கி கஷ்டப்பட்டு கட்டி வாழ்ந்து வரும் வீடுகளை சிப்காட் நில வங்கிகளுக்காக அரசு நிலம் கையகப்படுத்த அரசு முயற்சி மேற்கொள்வதாக வரும் தகவல் தங்கள் மத்தியில் அச்சமும், கவலையும் ஏற்படுத்தி உள்ளதாகவும், ஆரம்பக் கட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் எனக் கூறி வெள்ளனுர் பகுதியைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமர்ந்து போராட்டம் மேற்கொண்டனர்.

அரசு நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பை கைவிடவில்லை என்றால் அடுத்த கட்டமாக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தும் முடிவை கைவிட வேண்டி மனு அளித்தனர்.

Tags:    

Similar News