சம்பளப் பாக்கி தராததால் மேஸ்திரி அடித்துக் கொலை : 3 பேர் கைது
திருவள்ளூர் அருகே சம்பள பாக்கி தராத வடமாநில மேஸ்திரியை அடித்துக்கொன்ற வழக்கில் 3 வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் செங்கல் சூளையில் சத்தீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ்,(30) என்பவர் மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார்.
இவர் அதே மாநிலத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்து செங்கல் சூளை பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அந்த சூளையில் பணியாற்றிவந்த நிஷாத் (20), சச்சின்(20), தோவர்தன் (18) உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் சம்பளம் பாக்கியைத் தராமல் மேஸ்திரி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக அந்த மூன்றுபேரும் ராஜேஷிடம் சம்பள பாக்கிப் பணத்தை கேட்டு வந்தனர். ஆனால் மேஸ்திரி சம்பளப் பணத்தை தரவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் இருந்த மூன்று இளைஞர்கள் ராஜேஷிடம் சம்பள பணத்தைக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், மேஸ்திரி சம்பளப்பணத்தை தர மறுத்துவிட்டதாக கூறுகிறார்கள். இதில் ஆத்திரமடைந்த மூன்று இளைஞர்களும் இரும்பு ராடால் மேஸ்திரியை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர்.
இதனை அடுத்து தகவல் அறிந்த வெள்ளவேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது தொடர்பாக சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் நிஷாத், சச்சின், தோவர்தன், ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக வேலை செய்யும் இடத்தில் சம்பளம் தராத மேஸ்திரியை ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சம்பளப்பணத்தை மேஸ்திரி தராமல் மறுத்ததற்கு ஏதாவது காரணங்கள் உள்ளனவா? வேறு ஏதாவது காரணங்கள் உள்ளனவா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.