நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்ட தகராறு : ரேஷன் கடை விற்பனையாளருக்கு வெட்டு..!
பெரியபாளையம் அருகே நிவாரணத் தொகை ரூ. 6000 வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் விற்பனையாளரை கத்தியால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.;
பெரியபாளையம் அருகே வெள்ள நிவாரணத் தொகை ரூ. 6000 வழங்குவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ரேஷன் கடை விற்பனையாளரை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்துக்குட்பட்ட எல்லாபுரம் பகுதியில் சுமார் 119.குடும்ப அட்டைதாரர்களுக்கு அரியப்பாக்கம் பகுதிநேர நியாய விலைக் கடை மூலம் அரசு அறிவித்த ரூ.6000 வெள்ள நிவாரணத் தொகை கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 100.க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் எல்லாபுரம் அருந்ததி நகரைச் சேர்ந்த முருகன் (வயது 37). என்பவருக்கு சிக்னல் கோளாறு காரணமாக கைரேகை வைப்பதில் கடந்த இரண்டு நாட்களாக சிக்கல் நீடித்து வந்தது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் விற்பனையாளர் ராஜேந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கை,கழுத்து,மற்றும் முகத்தில் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அப்பகுதி மக்கள் மீட்டு முதலுதவிக்காக பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிவாரணம் வழங்குவது ஏற்பட்ட தகராறு காரணமாக விற்பனையாளர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.