பழுதடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை..!

சோழவரம், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சீர்செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-30 08:00 GMT

பழுதடைந்து கிடக்கும் சாலை. இப்படி சாலை பழுதாகி நெடுகிலும் காணப்படுகிறது.

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைமில் ஜனப்பன் சத்திரம் கூட்டுசாலை குண்டும் குழியுமாக மாறி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் அவல நிலை  ஏற்பட்டுள்ளது. அந்த சாலையில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை  அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீர்செய்ய வேண்டும் என பொதுமக்கள் மாற்று வாகன ஓட்டிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர். 

சென்னையில் இருந்து வடமாநிலங்களை இணைக்கும் பிரதான சாலையான ஜி.என்.டி. சாலை மாதவரம் ரவுண்டானாவில் தொடங்கி புழல், செங்குன்றம், ஜனப்பன்சத்திரம், தச்சூர், கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் வரை சுமார் 45கி.மீ. தமிழத்தில் செல்கிறது.

ஆந்திரா மற்றும் வடமாநிலங்களை இணைக்கும் இந்த சாலை வழியே நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அண்மையில் இந்த சாலையில் ஜனப்பன்சத்திரம் கூட்டூசாலையில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

வாகனங்கள் அனைத்தும் பல்லாங்குழியாக மாறியுள்ள சாலையில் பயணிக்கும் போது நடனமாடியபடியே செல்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் சாலையில் தேங்கி நின்ற மழை நீரில் பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் படுகாயமடைந்தார்.

இதே போன்று குண்டும் குழியுமாக இருக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் தினந்தோறும் விபத்துக்களை சந்தித்து வருகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. அவசர சிகிச்சைகளை பெறுவதற்காக சென்னை மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட இந்த மோசமான சாலையால் குறித்து நேரத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இருசக்கர வாகனங்களில் அலுவலகம் செல்வோர் இந்த சாலைகளில் பயணித்து மீண்டும் வீடு திரும்புவார்களா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக  சாலை அமைத்து கொடுக்கும் அதிகாரிகள், பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளை சீரமைப்பதில் அக்கறை செலுத்துவதில்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர்.

சுங்ககட்டணம் செலுத்தி பயன்படுத்தும் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையிலும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாமல்  இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.வாகனங்கள் செல்லும் சாலையினை முழுமையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி கூறுகின்றனர்.

பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் இந்த சாலையில் இனியேனும் உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் சீரமைத்து போக்குவரத்துக்கு  தடையின்றி செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர். பொதுமக்கள் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்?

Tags:    

Similar News