ரௌடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் கோட்டாட்சியர் ஆய்வு..!
சோழவரம் அருகே பூதூரில் இரண்டு ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் கோட்டாட்சியர் நேரில் சென்று சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை செய்தார்.
.சோழவரம் அருகே 2 ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் பொன்னேரி கோட்டாட்சியர் (பொறுப்பு) நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். உடற்கூறு ஆய்வுக்கு பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும் எனவும் தகவல் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே பூதூர் அடுத்த மாரம்பேடு என்ற பகுதியில் முத்து சரவணன் மற்றும் சண்டே சதீஷ் ஆகிய 2 ரவுடிகள் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ரவுடி முத்து சரவணன் மீது 6 கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் என பல்வேறு வழக்குகள் உள்ளன.
அதேபோல கூட்டாளி ரவுடி சண்டே சதீஷின் மீதும் 5 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பாடியநல்லூர் முன்னாள் அதிமுக ஊராட்சி மன்றதலைவர் பார்த்திபன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடிகள் முத்து சரவணன் மற்றும் சண்டே சதீஷ் ஆகியோர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து காவல் துறையினர் தனிப்படை அமைத்தனர்.
பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் ஜவஹர் தலைமையில் ஒரு காவல் ஆய்வாளர், 2 காவல் உதவி ஆய்வாளர்கள், 3 காவலர்கள் என தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பூதூர் அருகில் மாரம்பேடு பகுதியில் பழமையான கட்டடம் ஒன்றில் ரவுடிகள் இருவரும் பதுங்கி இருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில் அங்கு சுற்றி வளைத்த போது, ரவுடிகள் துப்பாக்கியால் காவலர்களை சுட்டதில் கிருஷ்ணமூர்த்தி, லிலித் பிரபு, ராஜேஷ் ஆகிய 3 காவலர்கள் காயமடைந்தனர்.
தற்காப்புக்காக காவல் துறையினர் இரண்டு ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில், முத்து சரவணன், சண்டே சதீஷ் இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் நேரில் சென்று ஆய்வு செய்து இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த போது, தற்காப்புக்காக காவல் துறையினர் திருப்பி துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 ரவுடிகள் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்களும், கைரேகை நிபுணர்களும் தடயங்களை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 2 ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்ட இடத்தில் பொன்னேரி கோட்டாட்சியர் (பொறுப்பு) கௌசல்யா நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் 2 துப்பாக்கிகள் இருந்ததை பார்த்து இந்த துப்பாக்கி கள்ள துப்பாக்கியா அல்லது எங்கு வாங்கப்பட்டது? இதனுடைய தன்மை என்ன என்பது குறித்து எல்லாம் காவல் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதேபோல தற்காப்புக்காக காவல் துறையினர் திருப்பி சுட்டதில் அவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுவதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பது குறித்தும், அதேபோல எத்தனை சுற்றுகள் துப்பாக்கியால் சுடப்பட்டது என்பது குறித்தும் காவல் துறையிடம் கேட்டறிந்தார்.
உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ள 2 ரவுடிகளின் உடற்கூறு ஆய்வுக்கு பின்னரே முழுமையான காரணம் தெரியவரும் என்றும் அதே நேரத்தில் துப்பாக்கி எப்படி சுடப்பட்டது என்பது குறித்து எல்லாம் தடயவியல் நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். அவை ஆய்வுக்கு ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் என்றும் உடற்கூறு ஆய்வு முடிந்த பிறகு முழுமையான தகவல் தெரிவிக்கப்படும் எனவும் கோட்டாட்சியர் (பொறுப்பு) கௌசல்யா தகவல் தெரிவித்தார்.