பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களை மாதம் ஒருமுறையே நடத்த வேண்டும்..!

பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களை மாதம் ஒருமுறையே நடத்த வேண்டும் என்று மாநில ஒருங்கிணைப்பாளர் பா.கா.தென்கனல் இசைமொழி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-11-17 03:45 GMT

பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பா.கா.தென்கனல் இசைமொழி 

பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களை மாதம் ஒருமுறையே நடத்த வேண்டும். அரசுப் பள்ளி பெற்றோர்கள்,பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்வியில் சனநாயகத்தை நிலை நாட்ட விரும்பிய கல்வியாளர்கள் மற்றும் கல்வி சார்ந்த இயக்கங்களின் தொடர் போராட்டங்களில் விளைந்தது தான் குழந்தைகள் கல்வி உரிமைச் சட்டம் 2009. அதில் உள்ள ஒரு சனநாயக அமைப்பு முறைதான் பள்ளி மேலாண்மைக் குழு.

ஒவ்வொரு பள்ளிக்கூடமும் அந்த ஊரைச் சார்ந்தது. எனவே அந்த ஊரில் உள்ள அதன் முதன்மை பயனாளர்களாகிய,பள்ளி பெற்றோர்களின் பிரதிநிதிகள் 15 பேரும், அந்த ஊரின் 2 உள்ளாட்சி உறுப்பினர்கள்,1 கல்வியாளர் மற்றும் அந்த பள்ளிக்கூடத்தின் 2 ஆசிரியர்கள் என்ற வகையில் 20 பேர் கொண்ட மிகவும் சனநாயகத் தன்மை கொண்ட அமைப்பாக அது கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்கள் மாதம் ஒருமுறை கூடி பள்ளிக்கூடத்தின் தேவைகளை கூடிப்  பேசி, தீர்மானமாக நிறைவேற்றி, அதை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டிய பொறுப்பு இந்த குழுவிற்கானது.

இந்த நடைமுறை கடந்த 2021 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டு, மே மாதம் மறு கட்டமைப்பு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அரசும், பள்ளிக் கல்வித் துறையும் பலவித வழிகாட்டுதல் மூலமாக இந்த அமைப்பு முறையை பலப்படுத்தி வருவது சிறப்பான ஒரு செயல்பாடு. எனினும் இதில் குறைபாடுகள் இல்லாமல் இல்லை.

செயலூக்கத்துடன் செயல்படக்கூடிய தலைமை ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் கொண்ட பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு பல முன்னுதாரணங்களை உருவாக்கி வருகிறார்கள். அதே சமயம் குறைவான மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளிலும், பல கிராமப்புறங்களிலும் இந்தப் பள்ளி மேலாண்மைக் குழு செயல்பாடுகள் மற்றும் பெற்றோர்களுடைய ஒத்துழைப்பும் குறைவாக இருக்கிறது என்பது இயல்பான உண்மை.

அண்மையில் நடந்த ஆசிரியர்களின் உரிமைப் போராட்டத்தில், சில இயக்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையாக, மாதந்தோறும் நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்களை மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடத்தலாம் என்று முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதை பள்ளிக் கல்வித் துறையும் ஏற்க உள்ளதாக தகவல்கள் ஆசிரியர் இயக்கங்கள் மூலமாக கேள்விப்படுகிறோம்.

முதலில், அரசு பள்ளிகளில் பெரும்பான்மையாக பிள்ளைகளைப் படிக்க வைப்பவர்கள் சமூகத்தின் அடித்தட்டு மக்களாக இருக்கிறார்கள். அவர்கள் சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்கள். எழுதப் படிக்க ஓரளவிற்கே கற்றிருக்கக்கூடிய முதல் தலைமுறையினர். பெரும்பான்மையோர் கூலி வேலைக்குச் செல்லக் கூடிய பெற்றோர்கள்.

இவர்களை கொண்டுதான் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆகிறது. இதில் பள்ளிக்கல்வித்துறையில் இருந்து முறையான பயிற்சிகள் படிப்படியாக வழங்கப்பட்டு வருகின்றன. முறையான பயிற்சிகள் இன்னும் வேகமாக விரிவடைந்த வகையில் விரைந்து வழங்கப்பட வேண்டும். அது முழுமை பெற்று அந்தப் பெற்றோர்கள் பள்ளிக்கூட செயல்பாடுகளில் தாங்கள் யார்? தங்களின் உரிமைகள் என்ன? என்பதையும் முதலில் உணர வைக்கவேண்டும்.

மறு கட்டமைப்பு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், பள்ளி மேலாண்மைக் குழுச் செயல்பாடுகள் குறித்து அன்றாட கல்விப்பணியில் இருக்கும், பள்ளிக் கல்வித் துறையின் உயர் அதிகாரிகள் முதற்கொண்டு, கீழ்மட்ட அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் வரையே கூட போதுமான புரிதல் சென்று சேரவில்லை. இப்படியான சூழலில் கடந்த ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை 15 நாட்களுக்குள்ளாகவே, மாதம் ஒரு கூட்டம் என்ற வகையில் கூட்டத்தில் கலந்து கொள்ள பள்ளிக்கு வந்த இந்த பெற்றோருக்கு, பள்ளி மேலாண்மைக் குழுவை பற்றிய புரிதல் அவ்வளவாக இருக்காது தான்.

இந்த நிலையிலும் கூட தங்களது பொறுப்புணர்ந்து, அன்றாட செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, பள்ளிக்கூடத்தின் அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொண்டு, தேவைகளை தீர்மானமாக நிறைவேற்றி, அதை செயல் வடிவம் கொடுத்து சிறப்பாக செயல்படும் பெற்றோர் குழுக்கள் தமிழ்நாடு முழுவதும் நிறைந்தே இருக்கிறார்கள்.

பள்ளிக்கூடத்தில் கட்டிடங்கள் முதற்கொண்டு ஆசிரியர் நியமனங்கள், மாணவர்களின் கற்றல் அடைவை கண்காணிப்பது, பள்ளிக்கூடத்தின் நிர்வாகப் பணிகள் என அனைத்து துறையிலும் இந்த பெற்றோர்கள் தங்களுடைய உரிமைகளை பயன்படுத்தி கோரிப் பெறுவதற்கான தேவைகள் நிறையவே இருக்கின்றன. இதற்கு ஆண்டுக்கு பத்து நாட்கள் மட்டுமே நடக்கும் இந்த கூட்டங்கள் போதுமானதாக இல்லை என்று கூறும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்.

இந்த சூழலில் தான் ஆசிரியர் இயக்கங்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூட்டம் நடத்தலாம் என்று கோரிக்கை இந்த முளைவிட்டு தழைத்து வளரும் பெற்றோர்களின் உரிமை வேரில் வெந்நீர் ஊற்றுவதாக உணர்கிறோம். முதலில் ஆசிரியர் இயக்கங்கள் இந்த மூன்று மாத கணக்கை எந்த ஆய்வின் அடிப்படையில் முன் வைத்தார்கள்?

பொத்தாம் பொதுவாக அனைத்து பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்களையும் மூன்று மாதம் என கோருவது எந்த விதத்தில் சரியாக இருக்கும்? சிறப்பாக செயல்படக்கூடிய பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களை, குழுக்களை மாதிரியாக எடுத்துக் கொண்டு குறைபாடுகள் உள்ள பள்ளிக்கூடங்களில், குறைகளை நிறைவாக்க வேண்டிய வேலைகளை தானே செய்ய வேண்டும். அதையும் கடந்து, சில பள்ளிகளில் குறைபாடுகளோடு தான் தொடர்ந்து நடக்கட்டுமே. அதை ஒரு பயிற்சியாக பார்ப்போமே.  அடுத்த அடுத்த ஆண்டுகளில் அதை சீர் செய்து கொள்வோமே. தொடர்ந்த பயிற்சி முன்னேற்றத்தை தராமல் போய்விடுமா என்ன?

பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களை நடத்துவதில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டி, சிறப்பாக நடத்துவதற்கு ஆசிரியர் இயக்கங்கள் ஆலோசனைகளை முன் வைத்து, அதற்கு துணை நின்று, சிறப்பாக செயல்பட வேண்டியது அவர்களின் கடமை. அவற்றை நிறைவு செய்தால்தான் கட்டமைப்பு, நிர்வாகம், கற்றல் அடைவு, மாணவர் சேர்க்கை ஆகியவை அரசுப் பள்ளிக்கூடங்களில் பலப்படும்.

பெற்றோர்களின் வளங்களை, பலமாக மாற்றி பள்ளிக்கூடத்தை பலப்படுத்தும் போது மாணவர் எண்ணிக்கை கூடும், ஆசிரியர் எண்ணிக்கை கூடுதலாகும். பெற்றோர்கள் வருகை குறைபாட்டில் உள்ள காரணத்தை ஆராய்ந்து, வரும் கல்வியாண்டுகளில் கூட்டத்துக்கு வரக்கூடிய அர்ப்பணிப்பான, செயல்பாட்டு ஊக்கம் மிக்க பெற்றோர்களை தேர்ந்தெடுப்பதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும்.

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்களை வடிவமைக்க வேண்டியது பெற்றோர்களுடைய பொறுப்பு. அதில் அவர்கள்தான் முதன்மை உரிமை பெற்றவர்கள். அனைத்து பெற்றோர்களின் பொறுப்புகளை உணர்த்தி புரிய வைக்கப்பட்ட பிறகு, அந்த பெற்றோர்கள் அதை முடிவெடுக்கட்டும்.

ஒரு வாதத்திற்கு, மூன்று மாதம் என்று வைத்துக்கொள்வோம் என்றால், ஒவ்வொரு மாதமும் நிறைவேற்ற வேண்டிய பணிகள் கூடிக்கொண்டு போய், மூன்று மாதம் என்பது மிகப்பெரும் சுமையாக மாறும். பள்ளி மேலாண்மைக் குழு என்ற ஒன்றே நீர்த்துப் போகக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இதில் பாதிக்கப்பட போவது மாணவர்கள் தான்.

1.பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சிகள் முறையாக (சடங்கு தனமாக இல்லாமல்) சென்று சேருவதை உறுதிப்படுத்தவும்.

2.போடப்பட்ட தீர்மானங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதையும் எந்த நிலையில் உள்ளது? என்பதையும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து கண்காணிக்கவும்.

3. நிறைவேற்றப்படாத தீர்மானங்களை நிறைவேற்ற அனைத்து வகைகளிலும் அரசுக்கு அழுத்தங்கள் கொடுக்கவும்.

4.உள்ளாட்சி உறுப்பினர்கள் முறையாக கூட்டங்களுக்கு வருவதை உறுதிப்படுத்தி, அவர்கள் மூலமாக வேலைகளை நகர்த்த வேண்டும்.

5. பள்ளிச் செயல்பாடுகளில் சின்ன சின்ன வெற்றிகள் தான், பெற்றோர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி செயலாற்ற உதவும். அத்தகைய வெற்றிகளை நுகர்வதற்கு ஆசிரியர்கள் சமூகம் தோள் கொடுத்து உதவ வேண்டும்.

அறம் சார்ந்த கட்டமைப்பை செம்மைப்படுத்த இணைந்த கரங்களோடு பயணிக்கவேண்டும் என அரசுப் பள்ளி பெற்றோர்கள்,

பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பா.கா.தென்கனல் இசைமொழி இதற்கான கோரிக்கைகள் அனைத்து பள்ளி மேலாண்மை குழு பெற்றோர்கள் மற்றும் உறுப்பினர்கள் மூலமாக தமிழக அரசுக்கு தெரிவித்து வருவதாக கூறினார். 

Tags:    

Similar News