தாமிரபரணி நதி மாபெரும் தூய்மைப்படுத்தும் பணி: ஆட்சியர் துவக்கி வைத்தார்

தூய பொருநை, நெல்லைக்குப் பெருமை-தாமிரபரணி நதியில் மாபெரும் தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தொடங்கி வைத்தார்

Update: 2022-04-23 11:10 GMT

தாமிரபரணி தூய்மை பணியை தொடங்கி வைத்த கலெக்டர் விஷ்ணு

தாமிரபரணி நதியினை மாபெரும் தூய்மை படத்தும் பணி இன்று மேற்கு தொடர்ச்சி மலை சின்னமயிலாற்றில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தொடங்கி வைத்து அங்குள்ள காணி இன மக்கள் மத்தியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

மேலும் காணி இன மாணவ, மாணவிகள் பயன்படுத்துவதற்கு மையால் எழுதும் பேனாக்கள் மற்றும் மை பாட்டில்களை வழங்கினார்கள். பல்துலக்குவதற்கு வேப்பங்குச்சி மற்றும் ஆலங்குச்சிகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். காணி இன மக்கள் அனைவரும் மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.

தொடர்ந்து பாபநாசம் பகுதியில் தாமிரபரணி நதியினை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த மாணவ,மாணவிகளை சந்தித்து தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி தாமிரபரணி தோற்றம், அது செல்லும் வழி பாதைகள் அதன் பயன்பாடுகள் குறித்தும் அதை நாம் எவ்வாறு தூய்மையாக வைக்க வேண்டும் என்பது குறித்தும் ஒலி,ஒளி படக்காட்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மதுரா கோட்ஸ் மேலகொட்டாரம் இரும்பு பாலம் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்து படகு மூலம் சிவந்திபுரம் வரை பயணித்து தாமிரபரணி ஆற்றினை எவ்வாறு தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதனை தொடர்ந்து சின்ன சங்கரன்கோவில் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மாணவ,மாணவிகளை சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து மாணவ,மாணவிகள் தூய்மை பணி குறித்து நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மூக்கூடல் பகுதியில் ஏராளமான மாணவ, மாணவிகள் தூய்மை பணி மேற்கொண்டனர். அவர்களை உற்சாகப்படுத்தி பரிசுகள் வழங்கி, அவர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தெரிவித்ததாவது:-

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றினை தூய்மை படுத்தும் பணி "Mission Thamirabari cleaning" திட்டத்தின் கீழ் தாமிரபரணி நதியில் 57 வழித்தடங்களில் 4700 கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களும், 500-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாபெரும் தூய்மை பணியினை பொது மக்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

தாமிரபரணி நதியில் குளிக்கும் தண்ணீராக வரும் தாமிரபரணி நீரை குடிநீராக எல்லோரும் பயன்படுத்தும் வகையில் "தூய பொருநை நெல்லைக்குப் பெருமை" என்ற மாபெரும் திட்டத்தினை கருவாக கொண்டு இப்பணி இன்று தொடங்கப்பட்டள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து அம்பாசமுத்திரம் வரை ஒரு பகுதியாகவும், அம்பாசமுத்திரம் சுத்தமல்லி வரை ஒரு பகுதியாகவும், சுத்தமல்லி முதல் நெல்லை மாநகராட்சி வரை ஒரு பகுதியாகவும், மாநகராட்சி முதல் மருதூர் அணைக்கட்டு வரை ஒரு பகுதியாகவும், என நான்கு கட்டங்களாக பிரித்து 62 கி.மீ நீளம் தூய்மைப்பணிகள் நடைபெற உள்ளது.

தாமிரபரணி வற்றாத ஜீவ நதி இதை சூழல் மாறாமல் காப்பது நமது கடமை. எனவே இப்பணியில் பொதுமக்கள் அனைவரும் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். என்று கூறினார்

இந்நிகழ்ச்சியில் களக்காடு முண்டந்துறை வனப்பாதுகாப்பு மற்றும் கள இயக்குநர் செந்தில்குமார், சூழலியல் மேம்பாட்டு அலுவலர் அன்பு, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிந்து , விக்ரமசிங்கபுரம் நகர் மன்ற தலைவர் செல்வ சுரேஷ் குமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர், விக்ரமசிங்கபுரம் நகராட்சி ஆணையர் கண்மனி , அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் ஆனந்த குமார் , தன்னார்வலர்கள் மதிவானன்(அரும்புகள்), மதிவானன் (அகஸ்தியர் மலை வனப் பாதுகாப்பு குழு) உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ,மாணவிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News