'கிடுகிடு' வென சரியுது அணைகளின் நீர்மட்டம்

தேனி மாவட்டத்தில், அணைகளின் நீர் மட்டம் ‘கிடுகிடு’வென வேகமாக சரிந்து வருகிறது.

Update: 2023-01-29 08:08 GMT

முல்லைப்பெரியாறு அணை (பைல் படம்)

தேனி மாவட்டத்தில், டிசம்பர் 15ம் தேதிக்கு பின்னர் மழை பெய்யவில்லை. கிட்டத்தட்ட 45 நாட்களாகவே தேனி மாவட்டத்தில் எங்குமே மழையில்லை. மேகமலையில் பெய்த மழைப்பொழிவு காரணமாக, வைகை ஆற்றில் தற்போது வரை நீர் வரத்து இருந்து கொண்டுள்ளது. அதேபோல் பெரியாறு புலிகள் காப்பகத்தில் பெய்த மழையால், முல்லைப்பெரியாறு அணைக்கு இன்னும் நீர் வரத்து உள்ளது. நாளுக்கு நாள் இந்த நீர்வரத்து குறைந்துகொண்டே வருகிறது.

ஆனால் பாசனத்திற்காக, அணைகள் முழு அளவில் திறக்கப்பட்டுள்ளதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம், இன்று காலை நிலவரப்படி 128.80 அடியாக சரிந்தது. அணைக்கு விநாடிக்கு 200 கனஅடி மட்டுமே நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரத்து 33 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் நீர்மட்டம் இன்னும் குறைந்து கொண்டே வரும். பிப்ரவரி இறுதியில் அணை நீர்மட்டம் 120 அடியாவது இருந்தால் மட்டுமே மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான குடிநீர் தேவையினை பூர்த்தி செய்ய முடியும். அடுத்த மழை பெய்ய, ஜூன் 15ம் தேதியை எட்டி விடும். அதுவரை நீரை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் வைகை அணை நீர் மட்டம் 53.08 அடியாக சரிந்தது. அணைக்கு விநாடிக்கு 821 கனஅடி நீர் வரத்து உள்ள நிலையில், குடிநீருக்காக மட்டுமே நீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு நீர் திறப்பது நிறுத்தப்பட்டு விட்டது. காரணம், வைகை அணை நீர் மூலம் தான் மதுரை மாநகராட்சி மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது.

மஞ்சளாறு அணை நீர் மட்டம் 49.55 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 103.32 அடியாக உள்ளது. சண்முகாநதி நீர் மட்டம் 26.25 அடியாக உள்ளது. இதனால் நீர் மட்டம் குறைந்தாலும், கோடை காலத்தில் குடிநீர் தேவையினை சரி கட்டி விட முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News