லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் உட்பட இரண்டு பேர் கைது

லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-01-11 04:45 GMT

 லஞ்ச ஒழிப்பு துறையால் கைது செய்யப்பட்ட குத்துக்கல் வலசை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ்

தென்காசி மாவட்டத்தில் வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் கொடுக்க லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த வந்தனா என்ற பெண் தற்போது அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வரும் நிலையில், அவர் தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள ராஜாநகர் பகுதியில் சுமார் 3.5 சென்ட் நிலம் வாங்கி, அதில் வீடு கட்டுவதற்காக முடிவு செய்துள்ளார்.

அதன்படி, ரூ.23 லட்சம் மதிப்பில் வீடு கட்ட வந்தனா திட்டமிட்ட நிலையில், முன்னதாக குத்துக்கல்வலசை ஊராட்சி அலுவலகத்தில் வீடு கட்ட அப்ரூவல் கோரி வந்தனாவின் உறவினரான ரெஜினிஸ் பாபு (வயது 44) என்பவர் விண்ணப்பம் செய்துள்ளார்.

இந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவராக உள்ள சத்யராஜ் என்பவர் நீங்கள் வீடு கட்ட எஸ்டிமேட் செய்த தொகையில், 2% சதவீதம் அதாவது 46 ஆயிரம் ரூபாய் தங்களுக்கு தரும் பட்சத்தில் உங்களுக்கு அப்ரூவல் தருவோம், இல்லையென்றால் அப்ரூவல் கிடையாது என தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை ஊராட்சி தலைவராக உள்ள திமுகவை சேர்ந்த சத்யராஜ் என்பவர் வந்தனாவின் உறவினரான ரெஜினிஸ்பாபுவிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று ரெஜினிஸ்பாபு ரூ.46,000 பணத்துடன் குத்துக்கல்வலசை ஊராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து ஊராட்சி மன்ற தலைவரிடம் லஞ்சப் பணம் ரூ.46 ஆயிரத்து கொடுத்த போது, ஊராட்சி மன்ற தலைவரான சத்யராஜ் அந்த பணத்தை அருகே நின்ற கான்ட்ராக்டரான சவுந்தரராஜன் என்பவரிடம் பணத்தை கொடுக்கும்படி கூறியுள்ளார்.

உடனே, பாபு ரூ.46 ஆயிரம் பணத்தை காண்ட்ராக்டரான சவுந்தரராஜனிடம் கொடுத்த நிலையில், கொஞ்சம் பணத்தை குறைத்து கொள்ளும்படி பாபு கூறியுள்ளார்.

உடனடியாக, சத்யராஜ் இளகிய மனம் கொண்டவர் போல, ரூ.6 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுக்கும்படி சவுந்தரராஜனிடம் கூறிய நிலையில், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், திமுக ஊராட்சி தலைவராக உள்ள ஒரு நபர் வீடு கட்ட பிளான் அப்ரூவல் பெறுவதற்கு லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News