கடையம் பகுதியில் மீண்டும் கரடி அட்டகாசம்.. தேன் கூடுகள் சேதம்...

தென்காசி மாவட்டம், கடையம் அருகே தோட்டத்தில் புகுந்த கரடி தேன்கூடுகளை உடைத்து சென்றுள்ளது.

Update: 2023-02-01 07:33 GMT

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கரடியால் சேதப்படுத்தப்பட்ட தேன்கூடுகள்.

தென்காசி மாவட்டம், கடையம் அருகேயுள்ள கோவிந்தபேரி ஊராட்சிக்குட்பட்ட ராஜாங்கபுரத்தில் செல்வன் என்பவர் சுமார் 15 ஏக்கர் அளவில் தோட்டம் வைத்து உள்ளார். அதில் தென்னை, மா, எலுமிச்சை, வாழை ஆகியவை பயிர் செய்து வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடையம் வேளாண்மை ஒருங்கிணைந்த பண்ணையம் சார்பில், அந்தப் பகுதி விவசாயிகளுக்கு தேன் கூடுகள் வழங்கப்பட்டன. அதன்படி, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட 10 தேன் கூடுகளை தோட்டத்தில் வைக்கப்பட்டன.

இந்த நிலையில், நேற்று இரவு தோட்டத்தில் புகுந்த கரடி அங்கிருந்த 10 தேன் கூடுகளை உடைத்து தேனை உறிஞ்சி சென்றுள்ளது. மேலும் அருகில் புற்று ஒன்றை தின்றுள்ளது. இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், ஏற்கெனவே பெத்தான் பிள்ளை குடியிருப்பில் கரடி தாக்கியதில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

அன்றில் இருந்து இன்று வரை இரவு நேரத்தில் தண்ணீர் பாய்க்க செல்ல மிகவும் அச்சமாக உள்ளது. இந்த தோட்டத்தில் நாங்கள் வீடு அமைத்து இருக்கும்போதே இரவில் கரடி வந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு தேன்கூடுகளை உடைத்துள்ளது பெரும் வேதனை அளிக்கிறது.

இந்த தேன்கூடுகள் எனக்கு மட்டுமல்ல ஐந்து விவசாயிகளுக்கு பாத்தியப்பட்டது. தற்போது முற்றிலும் சேதமாகி உளளது. எனவே, அரசு இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.

தொடர்ந்து, கரடி நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் அந்தப் பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு கரடி நுழையாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News