சங்கரன்கோவில் அருகே தனியார் நூற்பாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவில் அருகே தனியார் நூற்பாலை தொழிலாளர்கள் நிலுவை தொகை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-03-01 05:42 GMT

பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவிற்கு உட்பட்ட மலையான்குளம் பகுதியில் கடந்த 1993-ம் ஆண்டு தனியார் நூற்பாலை ஒன்று தொடங்கப்பட்டது. இந்த நூற்பாலையில் 500-க்கும் மேற்பட்ட நபர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆலை மூடப்பட்டது. இதனை கண்டித்து தொழிலாளர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். அப்போது திருவேங்கடம் வட்டாட்சியர் மற்றும் உயரதிகாரிகள் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வழங்க கோரி கோரிக்கை விடுக்கப்பட்டது.

பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையினை வழங்குவதாக நிர்வாகம் உறுதி அளித்தது. ஆனால் அதன்படி செயல்படாமல் தொகையை வழங்காமல் ஏமாற்றிவிட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை வழங்கக் கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் சீதாராமன், வடக்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், தெற்கு மாவட்ட தலைவர் குலாம், மாவட்ட துணைத்தலைவர் பால் நேரு கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைத்தலைவர்கள் அய்யம் பெருமாள் பிள்ளை, சேதுஅரிகரன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேறும் வரை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் திருவேங்கடம் வட்டத்திற்கு உட்பட்ட மகேந்திரவாடி பஞ்சாயத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டு நடவடிக்கை இல்லாமல் உள்ளது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கைகளுடன் தென்காசி மதுரை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குத்துக்கல்வலசை பகுதியில் இந்திய சுதந்திர போராட்ட தியாகியான கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை திருஉருவச்சிலை அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவும் வழங்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி நகர செயலாளர் சங்கர், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், தென்காசி நகர தலைவர் பழனி, மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், தென்காசி நகர துணை தலைவர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News