'24 மணி நேரமும் என் அறை கதவு திறந்திருக்கும்'- தென்காசி மாவட்ட ஆட்சியர்

‘பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க 24 மணி நேரமும் என் அறை கதவு திறந்திருக்கும்’- என தென்காசி மாவட்ட புதிய ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-06 07:57 GMT

 தென்காசி புதிய மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன்

தென்காசி மாவட்டத்தின் புதிய  ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட  துரை ரவிச்சந்திரன் பொதுமக்கள் குறை தெரிவிப்பதற்காக என் அறைக்கதவு 24 மணி நேரமும் திறந்தே இருக்கும் என  தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கடந்த 2019 ம்வருடம் பிரிந்து புதிய மாவட்டமாக உருவானது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் முதல் ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன் பொறுப்பேற்றார். அவரை தொடர்ந்து இரண்டாவது மாவட்ட ஆட்சியராக சமீரன் பொறுப்பேற்றார். பின்னர் மூன்றாவது மாவட்ட ஆட்சியராக கோபால சுந்தரராஜ் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து நான்காவது ஆட்சியராக ஆகாஷ் பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டபோது தென்காசி மாவட்ட ஆட்சியரும் இடம் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக துரை ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.

அதன்படி தென்காசி மாவட்டத்தின் புதிய மற்றும்  ஐந்தாவது மாவட்ட ஆட்சியராக துரை ரவிச்சந்திரன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் பேட்டியின்போது கூறியதாவது:-

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான பணிகள் துரிதமாக நடைபெறவும் அரசின் நலத் திட்டங்கள் விவசாயிகளுக்கு முறையாக கிடைத்திடவும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்ற முறையில் பணியாற்றுவேன். சுற்றுலாத்தலமான குற்றாலத்தை முன்னேற்றும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து சுற்றுலாப் பயணிகளை கவருகின்ற வகையில் சுற்றுலா துறையின் மூலம் உரிய நிதிகளை பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும்.

எனக்கு முன்பு இருந்த ஆட்சித் தலைவர் ஆற்றிய பணிகளை தொடர்ந்து சிறப்பாக பணியாற்றுவேன். நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மாவட்டத்தில் அகற்றப்பட்டது. அந்த நீர் நிலை ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். நமது மாவட்டத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் கனிம வளங்கள் உரிய முறையில் கோட்டாட்சியர் தலைவர் மூலம் எடை சரிபார்க்கப்பட்ட பின்னர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். நான்கு வழி சாலை பணிகள் நீண்ட காலமாக நடைபெறுவதாக கூறப்படும் நிலையில் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தங்களுடைய குறைகளை எந்நேரமும் என்னை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம். 24 மணி நேரமும் பொதுமக்களுக்காக என் அறை திறந்த நிலையில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரனுக்கு மாவட்டத்தில் உள்ள முக்கிய அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News