ரூபாய் தாள்களில் லட்சுமி, விநாயகர் படம் தவறில்லை - ஆம் ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன்

Indian Rupee Notes -' ரூபாய் தாள்களில் லட்சுமி, விநாயகர் படம் போட சொன்னதில் தவறில்லை', என தனது அறிக்கையில், ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-27 05:28 GMT

ரூபாய் தாள்களில் லட்சுமி, விநாயகர் படம் வைப்பதில் தவறில்லை என்கிறார் ஆம் ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன்.

Indian Rupee Notes -டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், புதன்கிழமை இந்திய கரன்சி நோட்டுகளில் இந்து தெய்வங்களான லட்சுமி மற்றும் விநாயகர் படங்களை சேர்க்குமாறு, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மகாத்மா காந்தியுடன் இந்த படங்களையும் சேர்ப்பது இந்தியாவுக்கு செழிப்பைக் கொண்டுவரும் என்று, அவரது நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில், கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சியை நடத்தி வரும் பாஜக, பாஜக ஆட்சியில் தான் செய்த ஒரு நல்ல வேலையை மேற்கோள் காட்டுமாறு ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால், பாஜகவுக்கு சவால் விடுத்துள்ளார். 2022 டிசம்பரில் வரவிருக்கும் டெல்லி மாநகராட்சி எம்சிடி தேர்தல் குறித்து பேசிய கெஜ்ரிவால், டெல்லி மக்கள் பாஜகவை நிராகரிப்பார்கள் என்றும் ஆம் ஆத்மி கட்சி முழுமையாக டெல்லி மாநகராட்சிகளை கைப்பற்றி மேலும் தன் மக்கள் சேவையை விரிவு படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால் தான் இந்திய மக்களின் எதிர்காலம். அவரால் மட்டுமே டெல்லி, பஞ்சாப் போல் இந்திய மக்களுக்கு தரமான கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை தேவைகளை கொடுத்து ஊழலை ஒழித்து, சாதி மத பேதமற்ற இந்தியாவை உருவாக்கி தர முடியும். இதற்கு ஒரே வழி மதவெறி அரசியல், கார்பரேட் தரகர்களின் கட்சியாக விளங்கும் பாஜகவை வீழ்த்தினால் மட்டுமே முடியும். ஆம் ஆத்மி கட்சியின் உண்மையான வளர்ச்சியை கண்டு அஞ்சும் பாஜக அரவிந்த் கெஜ்ரிவாலை இந்து விரோதி என சித்தரிக்க தொடங்கினார்கள், துணை முதல்வர் மனிஷ் சிசோடியா வீடுகளில் சிபிஐ சோதனைகள் நடத்தி அச்சுறுத்த முயன்றனர், சுகாதாரதுறை அமைச்சர் சத்யந்திரா ஜெயினை, பொய் வழக்கில் கைது செய்து 4 மாதங்கள் சிறையில் அடைத்தனர்.

பாஜகவின் எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படாத ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், முள்ளை, முள்ளால் எப்படி எடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர். அதை டெல்லி, பஞ்சாப் தேர்தல்களில் நிரூபித்து காட்டியவர் தொடர்ந்து இமாச்சல் பிரதேஷம், குஜராத் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் நிரூபித்து காட்டுவார், தேர்தல் முடிவுகள் மற்ற எந்த அரசியல் கட்சிகளும் எதிர் பார்த்திராத அமோக வெற்றியை ஆம் ஆத்மி கட்சி பெறும்.

இவ்வாறு வசீகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவித்துள்ளார்.

இந்திய ரூபாய் தாள்களில் இதுவரை, தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் புகைப்படம் மட்டுமே இடம்பெற்று வருகிறது. ஆனால், நாணயங்களில், தமிழக தலைவர்களின் உருவப்படங்கள் அச்சிடப்பட்டு, புழக்கத்தில் இருந்து வருகிறது. மகாத்மா காந்தியை தவிர, வேறு எந்த தலைவரது புகைப்படமும் இந்திய ரூபாய் தாள்களில் இடம்பெற வேண்டும் என்று இதுவரை யாரும் கோரிக்கை வைத்தது இல்லை. இந்நிலையில், தெய்வங்களின் படங்கள் இடம்பெற செய்ய வேண்டும் என, ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை வைத்திருப்பது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News