அரசு ஊழியர்கள் வாக்குகளை முறைகேடாக பயன்படுத்த முயற்சி !

Update: 2021-03-30 11:45 GMT

தென்காசியில் திமுகவிற்கு சாதகமாக உள்ள 90 சதவீத அரசு ஊழியர்களின் வாக்குகளை முறைகேடாக பயன்படுத்த சிலர் முயற்சிப்பதாக தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் ஆசிரியை அனுஷ்டா என்பவர் தபால் வாக்கிற்கான விண்ணப்பம் பெறப்படாத நிலையில், அவர் வாக்களித்ததாக சமூகவலைதளங்களில் புகைப்படம் வெளியானதை அடுத்து காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் புகார் அளித்ததாக கூறப்பட்ட நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்நிலையில் திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட கலெக்டர் சமீரனை சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த புகார் மனு குறித்து திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கூறுகையில், ஆசிரியை அனுஷ்டா மீது காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் புகார் அளித்ததாக வீண் வதந்திகள் வெளியாகி அவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது, எனவே அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

தபால் வாக்கினை பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார். மேலும் அவர் கூறுகையில், தென்காசி அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் அரசு ஊழியர்களின் வாக்குகள் திமுகவுக்கு சாதகமாக உள்ள நிலையில் முறைகேட்டில் ஈடுபட முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News