ஊர் பெயரை மாற்றி போலி ரசீது: பஞ்சாயத்து தலைவர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கடையம் பெரும்பத்து ஊராட்சி ரசீதுகளில் ஊர் பெயரை மாற்றி பஞ். தலைவர் மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் வார்டு உறுப்பினர்கள் புகார்.

Update: 2023-03-14 09:15 GMT

கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து தலைவர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த கிராம மக்கள்.

தென்காசி மாவட்டம் கடையம் பெரும்பத்து ஊராட்சியைச் சேர்ந்தது மேட்டூர் கிராமம். இங்குள்ள இரயில்வே கேட் அருகில் சிலர் சபரி நகர் எனவும் வெய்க்காலிப் பட்டி எனவும் போர்டு வைத்துள்ளனர். எனவே மேட்டூருக்குள் வேறு ஊர் பெயர் வைத்திருப்பதைக் கண்டித்து கடந்த 8 ம் தேதி மேட்டூர் மக்கள் மயானத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த தாசில்தார் ஆதிநாராயணன், இன்ஸ்பெக்டர் சரவணன்,  சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மறுநாள் தாசில்தார் தலைமையில் நடந்த சமாதானக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் இன்று காலை மேட்டூரைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் டார்லிங் லோகா, கிறிஸ்டி புனிதா மற்றும் ஜெயராஜ், செளந்தராஜ், பென்யமீன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். அதில் 'கடையம் பெரும்பத்து ஊராட்சி தலைவர் பொன் ஷீலா மற்றும் ஊராட்சி செயலர் ஆணைமணி ஆகியோர் ஊராட்சி ரசீதுகளில் மேட்டூர் என்ற பெயரை சபரி நகர் எனவும் வெய்க்காலிப் பட்டி எனவும் பெயரை மாற்றி மோசடி செய்து மதக்கலவரத்தை தூண்ட முயற்சி செய்கிறார்கள் எனவும் அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பிரச்சனை தொடர்பாக கிராம மக்கள் இடுகாட்டில் குடும்பத்துடன் குடியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News