கார்ப்பரேட் கம்பெனிகள் மூலம் கோடிக் கணக்கில் தேர்தல் நன்கொடை..! பா.ஜ.க அரசு மீது எம்.எல்.ஏ குற்றச்சாட்டு..!

அதானி உயர்வுக்காக எல்.ஐ.சி. மற்றும் எஸ்.பி.ஐ. அரசு நிறுவனங்களை பயன்படுத்துவதற்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்பட்டுள்ளார்.

Update: 2023-02-25 02:55 GMT

பட விளக்கம்: தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் செய்தியாளர்களை சந்தித்த போது எடுத்த படம்.

பா.ஜ.க அரசு கார்பரேட் கம்பெனிகள் மூலம் ரூ. 5, 270 கோடியை தேர்தல் பத்திரங்கள் வழியாக நன்கொடையாக பெற்றுள்ளது என தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி பேட்டி அளித்துள்ளார்.

தென்காசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான பழனி சுரண்டையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேட்டியின்போது கூறியதாவது:-

நாட்டின் எல்.ஐ.சி மற்றும் எஸ்.பி.ஐ. போன்ற பொது நிறுவனங்கள் ஏழை எளிய மக்களின் கடின உழைப்பில் கட்டமைக்கப்பட்டவை. இதில் கடந்த சில நாட்களில் எல்.ஐ.சி.யின் 39 கோடி பாலிசிதாரர்கள் மற்றும் முதலீட்டார்கள் 33 ஆயிரத்து 60 கோடி ரூபாய் வரை இழந்துள்ளனர்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியாவின் பிற வங்கிகளிடமிருந்து 80 ஆயிரம் கோடி ரூபாய் வரை அதானி குழுமம் கடன் பெற்றுள்ளது. இதே நிலை நீடித்தால் நாட்டில் குறிப்பிட்ட பணக்காரர்கள் மட்டுமே வாழக்கூடிய நிலை ஏற்படும். கோடிக்கணக்கான இந்தியர்களின் கடின உழைப்பால் சேமித்த பணத்தை எல்.ஐ.சி. பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அதானி குழுமத்தில் முதலீடு செய்ததன் மூலம் அந்த நிறுவனங்கள் சந்தை மதிப்பை இழந்தது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க நாங்கள் போராடி வருகிறோம்.

இந்தியாவின் முதல் பெரிய கோடீஸ்வரராகவும் உலகத்தின் மூன்றாவது கோடீஸ்வரராகவும் உயர்ந்தவர் கவுதம் அதானி சமீபத்தில் ஹின்டன்பார்க் ஆய்வறிக்கை வெளி வந்த பிறகு பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. உலக பணக்காரர்கள் வரிசையில் 11 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதானி உயர்வுக்காக எல்.ஐ.சி. மற்றும் எஸ்.பி.ஐ. அரசு நிறுவனங்களை பயன்படுத்துவதற்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்பட்டுள்ளார். இதற்கு, கார்ப்பரேட்டுகள் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் 5270 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் வழியாக பா.ஜ.க. நன்கொடை பெற்றுள்ளது.

எனவே மத்தியில் ஆளும் பா.ஜ.க ஆட்சியை இந்திய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விரட்டி அடித்து காங்கிர தலைவர் ராகுல் காந்தி அவர்களை பிரதமர் ஆக்குவதற்கு பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News