தோரணமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்: விமர்சையாக நடைபெற்றது

Update: 2022-01-18 14:08 GMT

தோரணமலை முருகன் திருக்கல்யாண வைபவம்.

தோரணமலை முருகன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.  கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அன்னதானம்  பார்சல் மூலமாக கிராமம் கிராமமாக சென்று வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள தோரணமலை முருகன் கோவிலிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி, ஆனை வடிவ மலைக்குன்றின் மேல் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் அகத்தியர், தேரையர் போன்ற சித்தர்கள் வாழ்ந்து மூலிகை ஆராய்ச்சி செய்த சிறப்பு பெற்ற ஸ்தலமாகும். உலகத்திலேயே முதல் அறுவை சிகிச்சை நடைபெற்ற இடமாக இந்த தலம் விளங்குகிறது.

தைப்பூசத்தையொட்டி இன்று காலை கணபதி ஹோமம்  நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆலயத்தில் மலைமேல் உள்ள சுனையில் இருந்து புனித நீர் எடுத்து, முருக பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து முருகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதன்பின் திருக்கல்யாண சீர்வரிசைக்காக நவதானியங்கள், பழங்கள் உள்ளிட்ட 31 பொருட்களை சீர்வரிசையாக எடுத்து வரப்பட்டு, மேளதாளங்கள் முழங்க திருக்கல்யாண நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கொரோனா பரவல் காரணமாக குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே கோவிலுக்கு வருகைபுரிந்து இருந்தனர். அதனால் கோவில் சார்பாக அன்னதானத்தை பார்சல்களாக கட்டி கிராம கிராமமாக கொண்டு வழங்கினர்.

Similar News