தேர்தல் பிரச்சார பிரச்சனைகள் – வேகமெடுத்த வாகனங்களினால் விபத்து

தயாநிதிமாறனுடன் வேகமாக சென்ற திமுகவினர் வாகனங்களால் , நிலைதடுமாறிய சரக்குவாகனம், இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இரண்டுபேர் படுகாயமடைந்தனர்.

Update: 2020-12-22 18:45 GMT

சேலத்தில் தயாநிதிமாறனுடன் வேகமாக சென்ற திமுகவினர் வாகனங்களால் நிலைதடுமாறிய சரக்குவாகனம், இருசக்கர வாகனம்மீது மோதி விபத்து ஏற்பட்டது. இரண்டுபேர் படுகாயம் அடைந்தனர்.

வேகமாக சென்ற கார்களால் விபத்து நேரிட்டதாக கூறி திமுகவினரின் செயலை கண்டித்து பாமகவினர் சாலைமறியலில் ஈடுபட்டதோடு, திமுகவினரின் கார் கண்ணாடியை அடித்து உடைத்தனர்.

சேலத்தில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்கிற தலைப்பில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக திமுக முன்னாள் எம்.பி தயாநிதி மாறன் நேற்று காலை சேலத்திற்கு வருகை தந்தார். நேற்றைய தினம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பல்வேறு தரப்பு மக்களிடையே கலந்துரையாடல் நடத்திய தயாநிதி மாறன் மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாமக தலைவர்கள் குறித்தும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டம் குறித்தும் கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு பாமக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் அருள், வன்னியர்களின் இட ஒதுக்கீடு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்கும் வரை தயாநிதி மாறன் செல்லும் இடமெங்கும் பாமகவினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிவித்தார்.

அதன்படி ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாவது நாளாக தயாநிதிமாறன் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பூசாரிபட்டி பகுதியில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாமகவினர் 30க்கும் மேற்பட்டோர் கருப்புக் கொடியுடன் குவிந்தனர். அப்போது அவ்வழியே வந்த தயாநிதிமாறனின் காரை மறித்து பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை போலீசார் அப்புறப்படுத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்த திமுக தொண்டர்கள் கருப்புக் கொடி காட்டிய பாமகவினற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து மறியலில் ஈடுபட்ட திமுக வினர் மீது பாமகவினர் கற்களை வீசி தாக்கியதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இருதரப்பினர் மோதலை கட்டுப்படுத்த முயற்சித்தனர். இந்த மோதலில் சிலருக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டதோடு திமுக வாகனம் ஒன்று சேதமடைந்தன.

இதை தொடர்ந்து தயாநிதி மாறன் மாமாங்கம் பகுதியில் தங்கியிருந்த நட்சத்திர விடுதி முன்பு 50க்கும் மேற்பட்ட பாமகவினர் கருப்புக் கொடியுடன் கூடி இருந்ததை அறிந்த திமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் விடுதி முன்பு குவிந்தனர். இதையடுத்து எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு டேனீஷ்பேட்டை பகுதியில் இருந்து சேலம் ஜங்சன் ரயில்நிலையம் நோக்கி வேகமாக சென்ற தயாநிதிமாறனின் காரை பின்தொடர்ந்து திமுகவினரின் கார்கள் படுவேகமாக சென்றது.

அப்போது டால்மியாபோர்டு பேருந்து நிறுத்தம் பகுதியில் திமுகவினரின் கார்கள் வேகமாக சென்றதில் சாலையில் சென்றவர்கள் நிலைதடுமாறினர். இதில், பாலக்கோட்டில் இருந்து தக்காளி ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்ற பிக்கப் சரக்கு வாகனம் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது பலமாக மோதி கவிழ்ந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூங்கபாடியை சேர்ந்த ஏழுமலை மற்றும் குமார் படுகாயமடைந்தனர். பிக்கப் வாகனத்தில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தக்காளி பெட்டிகள் சாலையில் சிதறியது.

வேகமாக சென்ற கார்களால் விபத்து நேரிட்டதாக கூறி திமுகவினரின் செயலை கண்டித்து பாமகவினர் அப்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியே வந்த திமுகவினரின் கார் கண்ணாடியை அடித்து உடைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லேசான தடியடி நடத்தி பாமகவினரை விரட்டனர். இதனையடுத்து காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Similar News