சேலத்தில் 408 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கல்
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் 408 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை வழங்கினர்.;
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களை சார்ந்த தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று (12.08.2023) சேலம் மாநகராட்சி, தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினர்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில். மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை வழங்கி இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:
கல்வித்துறையில் அரசுத்துறையுடன் இணைந்து தனியார் பள்ளிகளும் தங்களது பங்களிப்பை வழங்குவதால் இந்தியாவில் சிறப்பாக கல்வி கற்கின்ற மாநிலங்களில் தமிழ்நாடு 2-ஆம் இடத்திற்கு உயர்ந்துள்ளது.
முதல்வர் தலைமையிலான அரசு நிர்வாகம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவதற்கு எடுத்துக்காட்டாக இதுபோன்ற நிகழ்ச்சிகள் அமைந்துள்ளது. தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கு எவ்வித சிரமமும் இல்லாமல் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உங்களை எல்லாம் அழைத்து வெளிப்படை தன்மையுடன் இங்கே அங்கீகார ஆணைகளை வழங்குகிறார்கள்.
குறிப்பாக தினந்தேறும் எங்களை விமர்சிக்கின்ற யூடியூப் சேனல்கள் கூட பள்ளிக் கல்வித்துறையில் 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வின் மூலம் பணி மாறுதல் வழங்கப்பட்டதில் ஒரு சிறு தவறு கூட இல்லாத வகையில் வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டதற்கு பள்ளிக்கல்வித்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். எதிர் தரப்பினரும் பாராட்டும் வகையில் பள்ளிக் கல்வித்துறையினை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பாக வழிநடத்தி வருகின்றார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டியர் அவர்களால் வளர்க்கப்பட்ட மாவட்டம் இந்த சேலம் மாவட்டம், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு பக்கபலமாக இருந்ததுடன் சேலம் மாவட்டத்தில் பெரியார் பல்கலைகழகம், அரசு பொறியியல் கல்லூரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து முக்கிய திட்டங்களையும் இங்கு கொண்டு வந்து சேர்த்து பொதுமக்கள் பயன்பெற்று கொண்டிருக்கும் வகையில் ஏற்படுத்தி கொடுத்தார்கள். அந்த வழியில் சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கென முதல்வர் பொறுப்பு அமைச்சராக எனக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்கள். இப்பணியினை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்வோம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:
முதல்வர் பள்ளிக் கல்வித்துறையின் மேம்பாட்டில் தனி கவனம் செலுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் அரசு பள்ளிகளுக்கு எண்ணற்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் பள்ளியைச் சார்ந்தவர்கள் தங்களை ஒதுக்கப்பட்டவர்கள் போல் எண்ணக்கூடாது. எங்களைப் பொறுத்தவரைக்கும் நம் மாநிலத்தில் செயல்படும் எந்தப்பள்ளியாக இருந்தாலும் அங்கு படிக்கக்கூடிய மாணவர்கள் அனைவரும் நம் பிள்ளைகள் என்ற கண்ணோட்டத்திலேயே செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம். குறிப்பாக தனியார் பள்ளிகளுக்கு என்று பல கோரிக்கைகள் வரப்பெறுகின்றன. அதை துறை அமைச்சர் என்கிற விதத்தில் முதல்வரிடம் கொண்டு சென்று அதற்கான தீர்வுகளை பெற்று வருகிறோம்.
அவ்விதத்தில் தனியார் பள்ளிகளைச்சார்ந்த அமைப்புகள், சங்க உறுப்பினர்கள் மற்றும் தனியார் பள்ளிகளைச் சார்ந்த அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் அரசிற்கு அரசுப்பள்ளி எப்படியோ அதேபோன்று தான் தனியார் பள்ளிகளும் உள்ளது. அனைவருமே கல்வியை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு கொண்டிருப்பவர்கள் தான். எனவே தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை வழங்கும் போது அவர்களை அலைக்கழிக்காமல் ஓர் இடத்தில் வைத்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
அதனடிப்படையில் தர்மபுரி, சேலம், திருச்சி மற்றும் கோவை மண்டலத்திற்கு தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்தில் ஏறத்தாழ 408 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கப்பட்டு, மற்ற மண்டலங்கள் வாரியாக அங்கீகார ஆணைகள் கொடுக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டு கொண்டிருக்கிறோம்.
தனியார் பள்ளி விழாக்களில் கலந்து கொள்ளும்போது மறக்காமல் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால் அரசுப்பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் இணக்கமான முறையில் செயல்பட்டு ஒரு நல்ல சமுதாயம் படைப்பதற்கும், மாணவர்கள் நலன் சார்ந்த பல நல்ல திட்டங்களை ஒன்றாக சேர்ந்து தீட்டுவதற்கு ஏதுவாக இருக்கும் என்று கூறினேன்.
இவ்விழாவானது வேறு ஒரு இடத்தில் நடைபெறுவதாக இருந்தது. மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் நம்முடைய மாநகராட்சி கட்டிடத்தில் உள்ள இந்த தொகும் பூங்காவில் நடத்தலாம் என்று கூறினார்கள். இதேபோல் கட்டிடத்தினை திருச்சி மாநகரிலும் கட்ட வேண்டும் என்று அண்ணன் கூறியிருக்கிறார்கள். எனவே சேலம் மற்றும் திருச்சி மாவட்டங்கள் இதுபோன்ற அதிகமான வளர்ச்சியை மேலும் அடைய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்களின் துணை மிக முக்கியமான ஒன்று என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, தனியார் பள்ளிகள் இயக்குநர் முனைவர் சு.நாகராஜ முருகன், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி சுவாதி ஸ்ரீ, முதன்மைக் கல்வி அலுவலர் மு.கபீர், மண்டலக்குழு தலைவர் உமாராணி மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த தாளார்கள், பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.