சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 500 சிறப்பு பஸ்கள் இயக்கம்..

Salem to Tiruvannamalai Bus-கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு, சேலம் கோட்டத்தில் இருந்து, திருவண்ணாமலைக்கு 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-12-04 08:33 GMT

Salem to Tiruvannamalai Bus

Salem to Tiruvannamalai Bus-கார்த்திகை தீபத் திருவிழா வரும் 6 ம் தேதி, (நாளை மறுதினம்) கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீப திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள், திருவண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் செல்வார்கள். பக்தர்கள் வருகைக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, சேலம் கோட்டத்தில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், ஆத்தூர், நாமக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து 270 சிறப்பு பஸ்களும், தர்மபுரி மண்டலத்திற்கு உட்பட்ட தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஓசூர், பர்கூர், பெங்களூருவில் இருந்து 230 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 500 சிறப்பு பஸ்கள் நாளை (டிச. 5ம் தேதி) முதல் 8 ம் தேதி வரை இயக்கப்பட உள்ளன.

சிறப்பு பஸ்களின் இயக்கத்தை கண்காணிக்க சேலம், புதிய பஸ் ஸ்டாண்ட், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பஸ் ஸ்டாண்டுகளில் போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தீபத்திருவிழாவிற்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதையொட்டி வட்டார போக்குவரத்து துறை சார்பில் சேலம், கிருஷ்ணகிரி, கோவை உள்ளிட்ட வட்டாரப் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 9 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த குழுவினர் திருவண்ணாமலையில் சிறப்பு பஸ்கள் ஒழுங்குபடுத்துதல், கண்காணித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள். இந்த குழு 6 ம் தேதி மற்றும் 7 ம் தேதிகளில் பணியாற்றுவார்கள். மேலும் சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது; மேலும், இன்னும் சில தினங்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், திருவண்ணாமலை தீபத்திருவிழா வரும் 6ம் தேதி மாலையில்தான் நடைபெறுகிறது என்றாலும், ஓரிரு தினங்கள் முன்னதாக, திருவண்ணாமலைக்கு சென்று தங்கி, கார்த்திகை தீப ஜோதியை தரிசனம் செய்ய, பக்தர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், இப்போதே திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க துவங்கி விட்டது. மேலும், மழை நாட்களில் திருவண்ணாமலைக்கு அதிக எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுவதால், பயணிகள் பாதிக்காத வகையில், பஸ்சுக்குள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மழை நேரங்களில், பஸ்களை பாதுகாப்பாக இயக்கவும் வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 இதே போல் கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு கூடுதல் பஸ்களை இயக்க, அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News