நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முத்தரையர் சமுதாயம் தனித்து போட்டி

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் முத்தரையர் சமுதாயம் தனித்து போட்டியிட உள்ளதாக மாயிலத் தலைவர் ராஜமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-01 06:30 GMT

தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநிலத் தலைவருமான ராஜமாணிக்கம். 

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முத்தரையர் சமுதாயம் தனித்து போட்டியிடும் என நமது மக்கள் கட்சி தலைவரும், தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநிலத் தலைவருமான ராஜமாணிக்கம் கூறினார்.

இது குறித்து ராணிப்பேட்டையில் அவர் அளித்த பேட்டியில்  கூறியதாவது:

தமிழ்நாடு முத்தரையர் சங்கமும், நமது மக்கள் கட்சியும் நீண்டகாலமாக, சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்தி அந்தந்த சாதிக்கான மக்கள் தொகைக்கேற்ப இடஒதுக்கீட்டை வழங்குமாறு அரசிடம் கோரிக்கை வைத்தும் எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை.

தமிழகத்தில் 29 பட்டப் பெயர்களில் வாழ்ந்து வரும் முத்தரையர் சமூதாயத்தை ஒரே பிரிவாக இணைத்து முத்தரையர் என்றே அழைக்க வேண்டும் என்று 1996 ம் ஆண்டு பிப்., மாதம் 22 ம் தேதி வெளியிட்ட அரசாணை எண் 15 யை அரசு நிறைவேற்றினால்,  15  சதவீத இட ஒதுக்கீடு முத்தரையர் சமுதாயத்திற்கு கிடைக்கும்.

அதிமுக., திமுக., அரசுகளிடம் எங்களின் கோரிக்கையை வைத்தோம். எங்கள் சமுதாய ஓட்டுக்களை பெற்றுக் கொண்ட அந்த கட்சிகள்  அரசாணையை நிறைவேற்றவில்லை. இதனால் கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு பல இடங்களில் வெற்றி பெற்றோம்.

இந்த முறை நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் தனித்து போட்டியிடுகிறோம். துாத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் எங்கள் பலத்தை உறுதி செய்வோம். தமிழகத்தில் 20 சதவீதம் முத்தரையர் சமுதாயத்தினர் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில இளைஞர் அணி செயலாளர் கல்யாணம் உடனிருந்தார்.

Tags:    

Similar News