மீன் வளர்ப்பு மேற்கொள்ள விவசாயிகளுக்கு மானியத்துடன் கடன்: கலெக்டர்

மீன் வளர்ப்பு மேற்கொள்ள விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது என நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-28 02:00 GMT

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்.

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தின் மூலம் பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மீன்வளர்ப்பு மேற்கொள்ள விவசாயிகளுக்கு மானியக் கடன் வழங்கப்படுகிறது. இதன்படி புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க ஆகும் மொத்த செலவின தொகை ரூ.7 லட்சத்தில், பொதுப்பயனாளிகளுக்கு 40 சதவீத மானியமாக ரூ.2,80,000, பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு 60 சதவீத மானியமாக ரூ.4,20,000 வழங்கப்பட உள்ளது.

இதுபோல் நன்னீர் மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க ஆகும் மொத்த செலவின தொகை ரூ. 4 லட்சத்தில் பொதுப்பயனாளிகளுக்கு 40 சதவீதம் மானியமாக ரூ.1.60 லட்சம், பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு 60 சதவீத மானியமாக ரூ.2.40 லட்சம் வழங்கப்பட உள்ளது. சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன்வளர்ப்பு செய்யும் திட்டத்தின் கீழ் ஆகும் மொத்த செலவின தொகை ரூ.7,50,000-ல், பொதுப்பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம், பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு ரூ. 4.50 லட்சம் மானியமாக வழங்கப்பட உள்ளது.

இத்திட்டங்களில் மாவட்டத்தில் உள்ள மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இத்திட்டங்களில் பயன் பெற விரும்புவோர், மேட்டூரில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News