நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருதுகளை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

Update: 2021-09-05 09:30 GMT

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருதுகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். 

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி., சின்ராஜ் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 10 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது, வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் தலா ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் வழங்கினர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் மாநில நல்லாசிரியர் விருது வழங்கும் விழா மாவட்ட அளவில் நடைபெறுகிறது. முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் சிறப்பாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நேரத்தில் எனக்கு ஆரம்ப கல்வி முதல் மருத்துவ கல்வி வரை சிறப்பாக கற்றுக்கொடுத்து, கல்வியில் மட்டுமின்றி இதர செயல்களிலும் என்னை சிறப்பாக வழிநடத்தி, இத்தகைய உயர் நிலையினை அடையச்செய்த எனது ஆசிரியர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார், டிஆர்ஓ துர்காமூர்த்தி, சிஇஓ பாலமுத்து, டிஇஓ.,க்கள் நாமக்கல் பாலசுப்ரமணியம், திருச்செங்கோடு ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News