நாமக்கல் மாவட்டத்தில் 11 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை

நாமக்கல் மாவட்டத்தில் 11 சதவீதம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-11 13:00 GMT

மரூர்ப்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல் தாலுக்கா மரூர்ப்பட்டியில், மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற்றது. நாமக்கல் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதி, வேளாண்மை இணை இயக்குனர் அசோகன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நடராஜன், ஆர்.டி.ஓ மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று இன்னும் முடிவு பெறவில்லை. தற்போதும் தொடர்ந்து கொண்டுள்ளது. அரசின் சார்பில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தடுப்பூசி போடாத பொதுமக்கள் அனைவரும் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில், 89 சதவீதம் மக்கள் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இன்னும் 11 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. பொதுமக்கள், தங்களின் 18 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளிகளுக்கு சென்று கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும். கல்வி தான் ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலையை ஒரு சில ஆண்டுகளிலேயே மாற்றி அமைக்கும் கருவியாக உள்ளது என்று கூறினார்.

முகாமில், பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் மொத்தம் 88 பயனாளிகளுக்கு ரூ. 50.61 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அடிப்படை வசதி செய்துதரக்கோரி, மரூர்ப்பட்டி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Tags:    

Similar News