நாமக்கல் மாவட்டத்தில் 58 கோயில்களுக்கு கும்பாபிசேகம்: அமைச்சர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 58 திருக்கோயில்களுக்கு கும்பாபிசேகம் நடத்தப்பட உள்ளது என்று, அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

Update: 2022-01-12 13:30 GMT

நாமக்கல் மாவட்ட கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு, புத்தாடைகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். அருகில் ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார்.

நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயிலில், மாவட்டத்தில் உள்ள திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புத்தாடைகளை வழங்கினார். 

அவர் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள 9 சிறிய திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்து கும்பாபிசேகம் நடத்தப்பட உள்ளது. ஒருகால பூஜைத் திட்டத்தின் கீழ் 266 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகை ரூ.1000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் உள்ள 35 திருக்கோயில்களுக்கு,  திருப்பணி செய்து கும்பாபிசேகம் நடத்த,  தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட உள்ளது.

கிராமப்புற திருக்கோயில் திருப்பணி திட்டத்தின்கீழ் உள்ள 14 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்து கும்பாபிசேகம் நடத்த, தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. கிராமக் கோயில்களில் பணியாற்றி ஒய்வுபெற்ற பூசாரிகளுக்கு, தமிழ்நாடு கிராமக்கோயில் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை ரூ.3,000லிருந்து ரூ.4,000 ஆக உயர்த்தி 59 பூசாரிகளுக்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் ஆஞ்சநேயர் திருக்கோயில் உதவி கமிஷனர் ரமேஷ், பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News