நாமக்கல்லில் 116 ஏழைப்பெண்களுக்கு ரூ.29.25 லட்சம் திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம் வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 116 ஏழைப் பெண்களுக்கு, ரூ.29.25 லட்சம் திருமண உதவித்தொகை, தாலிக்காக 928 கிராம் தங்கம் ஆகியவற்றை, அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

Update: 2021-06-28 10:50 GMT

நாமக்கல்லில், அரசு சார்பில் ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்குத் தங்கத்தை,  அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். அருகில் கலெக்டர் ஸ்ரேயாசிங் உள்ளிட்டோர்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன், தாலிக்குத் தங்கம் வழங்குதல் மற்றும் ரேசன் கார்டு இல்லாத திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்து கொண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்த 115 ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி தொகையாக ரூ.28.75 லட்சம் மற்றும் தாலிக்கு தலா 8 கிராம் தங்க நாணயமும் வழங்கினார்.

அதேபோல், பட்டம், டிப்ளமோ படித்த 1 பெண்ணிற்கு ரூ.50,000 திருமண நிதியுதவி தொகையுடன் 8 கிராம் தங்க நாணயம் உள்பட, மொத்தம் 116 ஏழை பெண்களுக்கு ரூ.29.25 லட்சம் திருமண உதவித்தொகை மற்றும் ரூ.73.10 லட்சம் மதிப்புள்ள 928 கிராம் தங்கத்தை அமைச்சர் வழங்கினார். ரேசன் கார்டு இல்லாத 106 திருநங்கைகளுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதியாக ரூ.2,000 வீதம் ரூ.2.12 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.

அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. ஊரடங்கால், பொதுமக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, ரேசன் கார்டுதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி 2 தவணைகளாக தலா ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.4,000 மற்றும் 14 வகையான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தற்கான உள்ளாட்சி தேர்தலில், திருநங்கை ரியா ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்காக நிறுத்தி வெற்றி பெற செய்து, பொது வாழ்வில் திருநங்கைகளுக்கு அங்கீகாரம் கிடைக்க செய்துள்ளோம் என்றார். நிகழ்ச்சியில் டிஆர்ஓ துர்காமூர்த்தி, நன்கொடையாளர் ராஜேஸ்குமார், மாவட்ட சமூகநல அலுவலர் கீதா, பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News