நாமக்கல்: விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு செய்ததால், நாமக்கல் பஸ் நிலையத்தில் அரசு பஸ்சை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

Update: 2021-12-09 02:30 GMT

விபத்து வழக்கில், இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு செய்ததால், சேலம் கோட்ட அரசு பஸ்சை, நாமக்கல் பஸ் நிலையத்தில் கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி உள்ள கூடச்சேரியைச் சேர்ந்தவர் பூரணி. அவர் கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி கூடச்சேரி பஸ் நிறுத்தம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பரமத்தி வேலூரில் இருந்து வேலகவுண்டம்பட்டி நோக்கி வந்த,  சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக்கழக பஸ் பூரணி மீது மோதியது.

இந்த விபத்தில், அவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கு நாமக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில், கடந்த 2016ம் ஆண்டு டிச.15ம் தேதி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சத்து  25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென கேர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதுவரை, போக்குரவத்துக் கழகம் இழப்பீடு தொகை வழங்காததால், அவர்கள் மீண்டும் நாமக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி, இழப்பீடு வழங்காததால் சேலம் கோட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்யும்படி உத்திரவிட்டார். இதையொட்டி, நாமக்கல் பஸ் நிலையத்தில், நின்று கொண்டிருந்த சேலம் கோட்ட அரசு பஸ்சை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டிற்கு எடுத்துச்சென்றனர்.

Tags:    

Similar News