மயிலாடுதுறையில் கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை 195-வது பிறந்தநாள் விழா

மயிலாடுதுறையில் கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் 195-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Update: 2021-10-11 07:09 GMT

கி.பி. 1826-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி திருச்சி அருகே குளத்தூரில் கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தார். பின்பு மயிலாடுதுறையில் கோர்ட் முன்சீப்பாக (நீதிபதியாக) பணியாற்றிய அவர், மயிலாடுதுறை நகராட்சியில் முதல் நகர்மன்ற தலைவராக பதவி வகித்தார். தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக பல்வேறு தமிழ், இலக்கிய நூல்களை எழுதியவர். வெளிநாடுகளில் பிரபலமாகி வந்த நாவல் கதைகளைப் போன்று தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதினார். இதனால் தமிழ் முதல் புதினத்தை இயற்றியவர் என்ற பெயர் பெற்றார்.

அவரது 195-வது பிறந்ததினம் இன்று மயிலாடுதுறையில் அனைத்துத் தமிழ் அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டது. தமிழுக்கு தொண்டாற்றிய வேதநாயகம் பிள்ளையின் திருவுருவ சிலை கல்லறைத் தோட்டத்தில் அமைந்துள்ளது. அவரது உருவ சிலைக்கு தமிழ் அறிஞர்கள், மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார் மற்றும்  பொதுமக்கள் மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வேதநாயகம் பிள்ளையின் திருவுருவ சிலையை நிறுவ வேண்டும், வேதநாயகம் பிள்ளையின் நினைவாக மணிமண்டபம் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது புதினத்தை தமிழக பாடதிட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று மயிலாடுதுறை தமிழ் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News