மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்கார் காலமானார்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய தக்கார் கருமுத்து தி. கண்ணன் காலமானார்.

Update: 2023-05-23 05:09 GMT

கருமுத்து கண்ணன்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 18 ஆண்டுகளாக தக்கார் பொறுப்பில் இருந்து வந்த கருமுத்து கண்ணன் உடல் நிலை பாதிக்கப்பட்டு இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 70.

கருமுத்து கண்ணன் மதுரை தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தியாகராசர் நூற்பாலை ஆகியவற்றின் தலைவராக இருந்து வருகிறார். இவருக்கு உமா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர்.

கருமுத்து கண்ணன் கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் இவர் சமீபத்தில் நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் கூட கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்த கருமுத்து கண்ணனின் உடல் மதுரை கோச்சடையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள முக்கிய பிரமுகர்களும் பொதுமக்களும் இன்று காலை முதல் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் நாளை மதியம் 2 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மறைந்த கருமுத்து கண்ணன் கடந்த 2015-ஆம் ஆண்டு தமிழக அரசின் காமராஜர் விருது பெற்றுள்ளார். அதே போல் மத்திய அரசின் ஜவுளிக்குழு தலைவராகவும் பொறுப்பு வகித்தார்

இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கருமுத்து கண்ணன் உடலுக்கு பல பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News