காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அதிரடியாக அகற்றினர்.

Update: 2022-07-13 10:45 GMT

காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா பேருந்து நிலையம். இந்தப் பேருந்து நிலையத்தில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டு அதற்கான தொகை வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் கடையின் முன்பு பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாகவும், பல கடைகள் நிரந்தரமாக கடை அளவில் தாண்டி சாலையில் வியாபாரம் செய்து வருவதால் உடனடியாக அனைத்தையும் அகற்ற ஒரு வாரம் முன்பு அனைவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதனைக் கண்டுகொள்ளாத வியாபாரிகளை கண்ட மாநகராட்சி ஆணையர் கண்ணன், பேருந்து நிலையத்தில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்யப் பட்டவர்களின் பொருட்களை பறிமுதல் செய்யவும், ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி சீர் செய்ய உத்தரவிட்டார். அதன்படி  இன்று நகர அமைப்பு ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில் சிவகாஞ்சி காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை காலை முதல் அகற்றி வருகின்றனர்.

அவ்வப்போது மாநகராட்சி ஊழியர்களுக்கும் வியாபாரிகளுக்கும் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. இதனை காவல்துறை தடுத்து பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள உதவி வருகின்றனர்.

Tags:    

Similar News